ADDED : ஜன 31, 2025 12:10 AM

புதுடில்லி:அமெரிக்க, சீன நிறுவனங்களுக்குப் போட்டியாக, ஏ.ஐ., மாடல்களை இந்தியா உருவாக்க உள்ளதாக, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். சீனாவின் புது வரவான டீப்சீக் ஏ.ஐ., மாடல், இந்திய சர்வர்கள் வாயிலாக வழங்கப்பட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒடிசாவில், சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் அவர் கூறியதாவது:
அமெரிக்காவின் ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தின் சாட்ஜி.பி.டி., சீனாவின் டீப்சீக் ஆர்1 ஆகிய ஏ.ஐ., மாடல்கள் பற்றி அதிகம் பேசப்படுகிறது.
இந்தியாவும் தனக்கான அடிப்படை ஏ.ஐ., மாடல்களை விரைவில் உருவாக்க திட்டமிட்டுள்ளது. 18,693 ஜி.பி.யு., திறனில், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பொதுவான கணக்கீடுகளுக்கு பயன்படுத்துவது போல, குறைந்த செலவில் பயன்படுத்தக்கூடியதாக அது இருக்கும்.
இந்தியாவால், இந்தியா வுக்காக, இந்தியர்களுக்காக பாரபட்சங்கள் நீக்கப்பட்டு, இந்திய மொழிகள், கலாசாரங்களை பிரதிபலிப்பதாக நம் அடிப்படை ஏ.ஐ., மாடல்கள் இருக்கும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு ஜி.பி.யு., ஒரு அமெரிக்க டாலருக்கும் குறைவான செலவில் இருக்கும்.
அதில் 40 சதவீத செலவை மத்திய அரசு ஏற்கும். குறைந்தது ஆறு முக்கிய டெவலப்பர்கள், ஸ்டார்ட்அப்கள் அடுத்த எட்டு முதல் 10 மாதங்களுக்குள் இந்திய ஏ.ஐ., மாடலை உருவாக்குவர்என எதிர்பார்க்கலாம்.
இவ்வாறு கூறினார்.

