ADDED : நவ 18, 2025 11:48 PM
புதுடில்லி:உலகளாவிய கடன் பத்திர தரவரிசைக்கான 'புளூம்பெர்க் குளோபல் அக்ரிகேட் இண்டெக்ஸ்' குறியீட்டில் இந்தியா இணையும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
இதுகுறித்து பெரியளவிலான வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்களிடம் புளூம்பெர்க் கருத்து கேட்டிருந்தது. இந்தியாவின் கடன் பத்திர சந்தை நடவடிக்கைகள் குறித்து நேர்மறையான கருத்தை பெரும்பாலோர் தெரிவித்தனர்.
இதையடுத்து இந்திய அரசு வெளியிடும் கடன் பத்திரங்கள் இக்குறியீட்டெண்ணில் ஓர் அங்கமாக இணைய இருக்கின்றன.
இதுகுறித்த அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, புளூம்பெர்க் நிறுவனத்தால், உலகெங்கும் உள்ள நாடுகளின் கடன் பத்திரங்களை பட்டியலிட்டு மதிப்பிடும் ஒரு குறியீடு ஆகும்.
சிறப்பம்சம்
உலக அளவில் 265 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை இக்குறியீடு பின் தொடர்ந்து வருகிறது. இதில் இந்தியாவின் கடன் பத்திரங்கள் இணைவதன்மூலம் அவற்றின் நம்பகத்தன்மை அதிகரிக்கும்.
மேலும் நம் அண்டை நாடுகளின் பத்திரங்களைவிட இவற்றில் லாபம் அதிகம் என்பதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் இந்திய பத்திரங்களில் முதலீடு செய்வர்.

