பாப்கார்ன் மக்காச்சோள உற்பத்தியில் வளர்ந்து வரும் இந்தியா!
பாப்கார்ன் மக்காச்சோள உற்பத்தியில் வளர்ந்து வரும் இந்தியா!
UPDATED : ஜூன் 21, 2026 11:13 AM
ADDED : ஜூன் 21, 2026 03:19 AM

நமது நிருபர்
இந்திய பாப்கார்ன் மக்காச்சோள உற்பத்தியில் முன்னணியில் இருக்கிறார் சென்னை, மைலாப்பூரை சேர்ந்த பட்டாபி ராமராவ். இந்தியாவின் 'கார்ன் மேன்' என்றழைக்கப்படும் இவர், கடந்த 2015ல் 800 ஏக்கரில் பாப்கார்ன் மக்காச்சோள சாகுபடியை தொடங்கிய நிலையில், தற்போது அது 39,830 ஏக்கராக அதிகரித்துள்ளது.
கிட்டத்தட்ட 9 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட இவரின் 'கவுர்மெட் பாப்கார்னிகா' நிறுவனம், இப்போது 500 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. இந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகவும் செயல்படும் பட்டாபி ராமராவ், நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி.
பாப்கார்ன் மக்காச்சோள உற்பத்தியில் நுழைந்ததன் பின்னணி?
சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் 'குக்கி மேன்' என்ற பெயரில் குக்கீஸ் தயாரித்து விற்பனை செய்து வந்தேன். என்னுடன் படித்த சத்யம் தியேட்டர் சி.இ.ஓ., கிரண் ரெட்டி சினிமா தியேட்டரில் விற்கும் பாப்கார்னை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்துதான் விற்கிறோம் என்று சொன்னார்.
அதாவது, கிலோ 60 ரூபாய் மதிப்புள்ள மக்காச்சோளத்தை 130 ரூபாய்க்கு வாங்குவதாக சொன்னார். இந்த மக்காச்சோளத்தை ஏன் இங்கே உற்பத்தி செய்யக்கூடாது என்ற எண்ணத்தில் உருவானதுதான் இந்நிறுவனம்.
அமெரிக்க பாப்கார்ன் மக்காச்சோளத்தை நம் நாட்டில் சாகுபடி செய்தபோது சந்தித்த சவால்கள்?
நம் நாட்டில் 1970களிலேயே மக்காச்சோள சாகுபடி தொடங்கப்பட்டுவிட்டாலும், பாப்கார்ன் ரகங்கள் நமக்கு புதிது. 1 கிலோ மக்காச்சோளத்தில் 38 - 48 லிட்டர் கிடைத்தால்தான் அது பாப்கார்னுக்கு ஏற்றது.
தொடக்கத்தில் 28 லிட்டர்தான் கிடைத்தது. நிறைய ஆராய்ச்சிகள், ரகங்கள் தேர்வு என்று முயற்சி செய்தோம். தற்போது 40 - 42 லிட்டர் பாப்கார்ன் கிடைக்கிறது. இறக்குமதியை குறைத்து இங்கேயே விதைகளை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
ஏற்றுமதி சந்தையில் இந்தியாவுக்கு உள்ள வாய்ப்புகள்?
அமெரிக்கா, பிரேசில், அர்ஜென்டினா, பிரான்சுக்கு அடுத்தபடியாக பாப்கார்ன் மக்காச்சோள உற்பத்தியில் இந்தியா வளர்ந்து வருகிறது. இந்திய பாப்கார்ன் சந்தையில் 48 சதவீதம், அதாவது 58,000 டன் பங்களிக்கிறோம். தாய்லாந்து, இலங்கை போன்ற நாடுகள் பிரேசிலிடமிருந்து பாப்கார்ன் மக்காச்சோளத்தை வாங்குகின்றன. அந்த சந்தைகளை கைப்பற்ற நமக்கு வாய்ப்புள்ளது.
ஓ.டி.டி., தளங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், பாப்கார்ன் சந்தையின் எதிர்காலம்?
ஓ.டி.டி., வளர்ச்சியால் மக்கள் தியேட்டருக்கு வருவது குறைந்தாலும், மக்களிடையே பாப்கார்ன் நுகர்வு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஆயில் இல்லாத ஸ்னாக்ஸ் என்ற வகையில் வரவேற்பு அதிகம். காபி, ஸ்ட்ராபெர்ரி என கோட்டிங் செய்து, மதிப்பு கூட்டி விற்பனை செய்கிறோம். இந்தியாவின் பாப்கார்ன் சந்தையில் 2,000 கோடியை தொடுவது தான் எங்கள் இலக்கு.
