ADDED : டிச 18, 2025 01:21 AM

புதுடில்லி : ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைகள், இந்திய நிறுவனங்களின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்ததாக தெரியவில்லை. சமீபத்திய தகவல்களின்படி, இம்மாதம் நாள் ஒன்றுக்கு 10 லட்சம் பீப்பாய்க்கு கூடுதலாக ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.
ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான லுாக்ஆயில் மற்றும் ராஸ்நெப்ட் மீது, அமெரிக்க அதிபர் டிரம்ப் பொருளாதார தடை விதித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பொதுத்துறையை சேர்ந்த ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் மங்களூரு ரிபைனரி நிறுவனங்கள், ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக அறிவித்தன.
இந்நிலையில் இம்மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 12 லட்சம் பீப்பாய் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த இறக்குமதி, பொருளாதார தடை விதிக்கப்படாத ரஷ்ய நிறுவனங்களிடமிருந்தே மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
ரஷ்ய நிறுவனங்கள் ஒரு பீப்பாய்க்கு 540 ரூபாய் தள்ளுபடி வழங்குவதால், அடுத்த மாதமும் இதே நிலை தொடர வாய்ப்புள்ளது.

