ADDED : ஏப் 17, 2026 12:48 AM

சென்னை : 'உலகளாவிய அசாதாரண சூழலிலும் நம்நாட்டின் ஏற்றுமதி சாதனை அளவாக உயர்ந்துள்ளது' என, எப்.ஐ.இ.ஓ., எனப்படும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, கூட்டமைப்பின் தலைவர் எஸ்.சி.ரால்ஹன் அறிக்கையில் கூறியதாவது:
போர்கள் உள்ளிட்ட உலகளாவிய அசாதாரண நிலை, வினியோக தொடர் சிக்கல் மற்றும் தேவை மாற்றங்கள் ஆகிய சூழலிலும் இந்தியா, 860 பில்லியன் டாலர், அதாவது, கிட்டத்தட்ட 80 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது, ஏற்றுமதியாளர்களின் திறன் மற்றும் வலிமையை வெளிப்படுத்துகிறது.
இன்ஜினியரிங் பொருட்கள், பெட்ரோலியம் தயாரிப்புகள், மின்னணு சாதனங்கள், மருந்துகள், ரசாயனங்கள், துணிநுால்கள், ரத்தினங்கள் மற்றும் நகைகள், அரிசி, கடல் உணவு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சியே ஏற்றுமதியை அதிகரித்து உள்ளது. இது, உலகளாவிய மதிப்பு தொடர்களில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துகிறது.
அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சீனா, நெதர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகள் நம் நாட்டின் முக்கிய ஏற்றுமதி சந்தைகளாக தொடர்கின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
