ADDED : மே 02, 2025 12:32 AM

சென்னை:தமிழகத்தில் குறைந்த முதலீட்டில் செயல்படும் குறுந்தொழில் நிறுவனங்களால், தங்களின் தொழிலுக்கு தேவைப்படும் நவீன கருவிகள், தளவாடங்கள் போன்றவற்றை வாங்குவதற்காக அதிக செலவு செய்ய முடிவதில்லை.
எனவே, குறுந்தொழில் குழும மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இத்தகைய நிறுவனங்கள் பயன் பெற, 222 கோடி ரூபாய் செலவில் 36 பொது வசதி மையங்கள் அமைக்கும் பணி, கடந்த 2022 - 23ல் துவங்கியது. இதில், 178 கோடி ரூபாய் தமிழக அரசின் மானியம்.
இதன்படி, விருதுநகரில் ஆயத்த ஆடை குழுமம், கன்னியாகுமரியில் ஜவுளி ஆடைகள் குழுமம், கடலுார் விருத்தாசலத்தில் செராமிக் குழுமம் என, மாநிலம் முழுதும் அமைக்கப்பட்டு வருகிறது.
ஒரே தொழிலில் ஈடுபடும் 20 அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்கள் பயன் பெறும் வகையில், இங்கெல்லாம் பொது வசதி மையம் அமைக்கப்படுகின்றன. இங்குள்ள நவீன கருவிகள், இயந்திரங்களை, குழுமத்தில் இடம்பெறும் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த வகையில், செங்கல்பட்டில் புகைப்படக் கலைஞர்களுக்கான மையம் உட்பட, எட்டு குறுந்தொழில் குழும பொது வசதி மையங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.
மீதமுள்ள மையங்களை, தொழில் நிறுவனங்களுடன் இணைந்து விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வருமாறு, மாவட்ட தொழில் மைய அதிகாரிகளை, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அறிவுறுத்தியுள்ளது.

