ADDED : செப் 05, 2024 03:34 AM

புதுடில்லி,:காப்பீடு விதிமுறைகளை, பார்வை குறைபாடு உடையோரும் படித்து அறிந்து கொள்ளும் வகையில், இந்தியாவில் முதன் முறையாக பிரைலி வடிவிலான காப்பீடு விண்ணப்பத்தை 'ஸ்டார் ஹெல்த்' நிறுவனம் வெளியிட்டுள்ளது.
'ஸ்பெஷல் கேர் கோல்டு' என்ற பெயரிலான, 40 சதவீதம் அல்லது அதற்கு மேல் பார்வை குறைபாடு உடையவர்களுக்கான காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்வதாக அந்நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ஆனந்த் ராய் தெரிவித்தார். இந்தியாவில் பார்வை குறைபாடு உடையவர்களின் எண்ணிக்கை 34 லட்சமாக உள்ளது.
நியூயார்க்:
உலக அளவில் முன்னணி செமிகண்டக்டர் நிறுவனமான 'என்விடியா'வின் பங்கு விலை, அமெரிக்க பங்குச் சந்தையில் இதுவரை இல்லாத பங்கு மதிப்பு வீழ்ச்சியை சந்தித்தது.
செமிகண்டக்டர் துறையைச் சேர்ந்த பெரும்பாலான நிறுவன பங்கு விலை சரிவடைந்த நிலையில், என்விடியா நிறுவனத்தின் மொத்த பங்கு மதிப்பில், வரலாறு காணாத அளவாக, 23.43 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதற்கு முன், 2022 பிப்ரவரியில் 'பேஸ்புக்'கின் தாய் நிறுவனமான 'மெட்டா'வின் பங்கு 19.48 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது தான், மிக அதிகபட்ச சரிவாக இருந்தது.
ஏற்றுமதி வட்டி மானியம் செப்.,30 வரை நீட்டிப்பு
புதுடில்லி:ஏற்றுமதியாளர்களுக்கு சலுகை அளிக்கக்கூடிய வட்டி சமநிலைத் திட்டத்தை, மத்திய அரசு மேலும் ஒரு மாதம் நீட்டித்துள்ளது. இதுகுறித்து, அன்னிய வர்த்தகத்திற்கான பொது இயக்குனரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஏற்றுமதிக்கு முந்தைய, பிந்தைய, ரூபாய் அடிப்படையிலான ஏற்றுமதி வரவுக்கான, வட்டி சமநிலைத் திட்டம், செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. கடந்த 31ம் தேதியோடு முடிவடைவதாக இருந்த, ஏற்றுமதியாளர்களுக்கான இந்த சலுகைத் திட்டம், மேலும் ஒரு மாதம் தொடரும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.