ஸ்டீல் இறக்குமதிக்கு 'சரல் சிம்ஸ்' பதிவு அறிமுகம்
ஸ்டீல் இறக்குமதிக்கு 'சரல் சிம்ஸ்' பதிவு அறிமுகம்
ADDED : நவ 20, 2025 11:39 PM

புதுடில்லி:ஸ்டீல் இறக்குமதியாளர்களின் சிரமத்தை குறைப்பதற்காக, 'சரல் சிம்ஸ்' எனும் பதிவு முறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
மத்திய ஸ்டீல் அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
ஸ்டீல் இறக்குமதியாளர்கள், ஸ்டீல் இம்போர்ட் மானிட்டரிங் சிஸ்டம் (சிம்ஸ்) இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம் ஆகும். இந்நிலையில், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் மற்றும் சிறிய இறக்குமதியாளர்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதிக்காக மட்டுமே உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் வசதிக்காக 'சரல் சிம்ஸ்' எனும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதனை பயன்படுத்த விரும்பும் இறக்குமதியாளர்கள் www.sims.steel.gov.in/SARAL என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போது, அவர்கள் மொத்தமாக இறக்குமதி செய்ய விரும்பும் ஸ்டீலின் அளவை குறிப்பிட வேண்டும்.
உடனே சரல் சிம்ஸ் எண் அவர்களுக்கு வழங்கப்படும். அதனை வைத்து, ஆண்டுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் ஸ்டீல் இறக்குமதி செய்து கொள்ளலாம்.
ஒரேமுறையில் பத்து டன்னுக்கும் குறைவாக ஸ்டீல் இறக்குமதி செய்வோர் (ஆண்டுக்கு அதிகபட்சம் 1000 டன்கள்) சரல் சிம்ஸ் பார் ஸ்மால் இம்போர்ட் என்று பதிவு செய்துகொள்ள வேண்டும்.
மூலப்பொருட்களை வரியின்றி இறக்குமதி செய்வதற்காக அனுமதி பெற்றோர் சிறப்பு பொருளாதார மண்டலம், ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஆகியோர் 'சரல் சிம்ஸ் ஃபார் எக்ஸ்போர்ட் பர்பசஸ்' என்ற வகைப்பாட்டில் வருவர். இவர்களின் இறக்குமதிக்கு வரம்பு ஏதுமில்லை.

