எண்ணுார் எரிவாயு முனையம் விரிவாக்கம் செய்கிறது ஐ.ஓ.சி.,
எண்ணுார் எரிவாயு முனையம் விரிவாக்கம் செய்கிறது ஐ.ஓ.சி.,
ADDED : செப் 29, 2025 11:04 PM

சென்னை,திருவள்ளூர் மாவட்டம், எண்ணுார் துறைமுக வளாகத்தில் உள்ள எல்.என்.ஜி., எனப்படும் திரவ நிலை இயற்கை எரிவாயு முனையத்தை விரிவாக்கம் செய்ய, இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
டில்லி, கர்நாடகா உட்பட பல பகுதிகளில் வீடுகளுக்கு, குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யப்படுகிறது. தமிழகத்திலும் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வினியோகம் செய்ய, சென்னை எண்ணுார் துறைமுக வளாகத்தில், எல்.என்.ஜி., முனையத்தை, இந்தியன் ஆயில் நிறுவனம் அமைத்துள்ளது.
இது ஆண்டுக்கு, 50 லட்சம் டன் திரவ நிலை இயற்கை எரிவாயுவை கையாளும் திறன் உடையது. இதற்கு, வெளிநாடுகளில் இருந்து கப்பல்களில் திரவ நிலையில் எரிவாயு எடுத்து வரப்படுகிறது.
இந்த எரிவாயு, வீடுகளுக்கு, பி.என்.ஜி., அதாவது, 'பைப்டு நேச்சுரல் காஸ்' எனப்படும் குழாய் வழித்தட இயற்கை எரிவாயுவாகவும், வாகனங்களுக்கு சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவாகவும் வினியோகம் செய்யப்படுகிறது.
சென்னை முதல் தென் மாவட்டங்கள் வரை, இந்த எரிவாயுவை எடுத்து சென்று வினியோகம் செய்ய, எண்ணுார் முதல் துாத்துக்குடி வரை, 'பைப் லைன்' அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பைப் லைன் வாயிலாக, இயற்கை எரிவாயு எடுத்து செல்லப்பட்டு, வீடுகளுக்கு குழாய் வழித்தடத்திலும், வாகனங்களுக்கு சி.என்.ஜி., மையங்கள் வாயிலாகவும், வினியோகம் செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி., காஸ் சிலிண்டர் விலையுடன் ஒப்பிடும்போது, சி.என்.ஜி., எரிவாயு குறைவாக இருப்பதுடன், அதிக 'மைலேஜ்' தருகிறது. இதனால், அதற்கு தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எனவே, எண்ணுார் எல்.என்.ஜி., முனையத்தை ஆண்டுக்கு, 50 லட்சம் டன் கையாளும் திறனில் இருப்பதை, 3,400 கோடி ரூபாய் முதலீட்டில், 1 கோடி டன்னாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.