தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ திவால் நடைமுறையை ஒழுங்குபடுத்தும் ஐ.பி.சி., - 2.0

 திவால் நடைமுறையை ஒழுங்குபடுத்தும் ஐ.பி.சி., - 2.0

 திவால் நடைமுறையை ஒழுங்குபடுத்தும் ஐ.பி.சி., - 2.0


UPDATED : ஏப் 20, 2026 05:05 AM

ADDED : ஏப் 20, 2026 04:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 20, 2026 05:05 AM ADDED : ஏப் 20, 2026 04:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவில் திவால் மற்றும் கடன் தீர்வு அமைப்பு, 2016க்கு முன்பு மிகவும் சீரற்றதாக இருந்தது. தனிநபர் திவால் பிரச்னைகள் பழமையான சட்டங்களான 'பிரெசிடென்சி டவுன்ஸ் இன்சால்வன்சி சட்டம் 1909, புரொவின்சியல் இன்சால்வன்சி சட்டம் 1920' ஆகியவற்றின் வாயிலாக நிர்வகிக்கப்பட்டன. நிறுவனங்களுக்காக வேறு விதமான சட்டங்கள் இருந்ததால், ஒருங்கிணைந்த தீர்வு அமைப்பு இல்லை. இதனால், கடன் மீட்பு மெதுவாகவும் சிக்கலாகவும் இருந்தது. இந்த குழப்பத்தை பிரதிபலித்த முக்கிய உதாரணம் 'ஜே.பி., குழுமம்'. ரியல் எஸ்டேட், சிமென்ட், 'யமுனா எக்ஸ்பிரஸ் வே' போன்ற பெரிய திட்டங்களில் ஈடுபட்டிருந்த இந்த நிறுவனம், மிக வேகமாக அதிக கடன்களை வாங்கி குவித்ததால், நிதிச்சுமையில் சிக்கியது.Image 1566732பணப்புழக்கம் குறைந்ததும், கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் போனது. வீடு வாங்கிய ஆயிரக்கணக்கானவர்கள் காத்திருந்தனர்; வங்கிகள் பணத்தை எதிர்பார்த்தன. ஆனால், தீர்வு காண ஒரே வழிமுறை இல்லாததால், வழக்குகள் நீண்டுகொண்டே போயின.

இந்த நிலையை மாற்றுவதற்காக, 2016ல், 'இன்சால்வன்சி அண்டு பேங்க்ரப்ட்சி கோடு', அதாவது ஐ.பி.சி., கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம், திவால் பிரச்னைகளை ஒருங்கிணைத்து தீர்க்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது.

இந்த சட்டத்தின் வாயிலாக, திவால் சூழல்களில், நிறுவன மேலாண்மையிலிருந்த கட்டுப்பாடு, கடன் வழங்குபவர்களுக்கு மாற்றப்பட்டது. தீர்வுக்கான காலவரையறைகள் நிர்ணயிக்கப்பட்டன. வழக்கு தாமதங்கள் குறைக்கப்பட்டன.

இதன் விளைவாக, கடந்த 10 ஆண்டுகளில் 3.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் தீர்க்கப்பட்டன. வங்கிகளின் வாராக்கடன்கள் கணிசமாக குறைந்து, மூன்று சதவீதத்துக்கு கீழ் வந்தது.

மேலும், ஐ.பி.சி., சட்டம் வழியாக மீண்ட நிறுவனங்கள், அதிக லாபமும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியதாக ஐ.ஐ.எம்., ஆய்வுகள் காட்டுகின்றன.

ஆனால், ஐ.பி.சி., முற்றிலும் குறைபாடில்லாத சட்டமாக இல்லை. சில சட்ட விளக்கங்கள் தெளிவாக இல்லாததால், நீதிமன்ற தலையீடு அதிகரித்தது. 330 நாட்களில் முடிக்க வேண்டிய வழக்குகள், 600 நாட்களுக்கு மேல் நீண்டன. புதிய முதலீட்டாளர்கள் பழைய நிர்வாகத்தின் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழலும் உருவானது.

இதையடுத்து, அரசு 2026ல், 'ஐ.பி.சி. 2.0' திருத்த சட்டத்தை அறிமுகப்படுத்தியது. அது பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டு, கடந்த வாரத்தில் குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்றது. இந்த சட்டம், திவால் நடவடிக்கைகளில் பல முக்கிய மாற்றங்களை கொண்டு வருகிறது.

முதலில், ஒரே நிறுவனத்திற்கு பல திவால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால், எந்த தேதி துவக்கமாக கருத வேண்டும் என்ற குழப்பம் இதில் நீக்கப்பட்டுள்ளது. முதல் தாக்கல் செய்யப்பட்ட மனுவே அதிகாரப்பூர்வ துவக்கமாக இப்போது எடுத்துக் கொள்ளப்படும். இது தாமதம் ஏற்படுத்தும் முயற்சிகளை தடுக்க உதவும்.

இரண்டாவது, 'லுக் பேக் பீரியடு' எனப்படும் ஆய்வுக் காலம் 2 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, திவாலுக்கு முன் செய்யப்பட்ட சந்தேகமான பரிவர்த்தனைகள் - குறைந்த விலையில் சொத்து விற்பனை, தொடர்புடையவர்களுக்கு முன்னுரிமை செலுத்துதல் போன்றவை - எளிதில் கண்டறிய முடியும்.

மூன்றாவது, கடன்தாரர் துவங்கும் திவால் தீர்வு நடைமுறை என்ற சி.ஐ.ஐ.ஆர்.பி., என்ற புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நீதிமன்றத்தின் முழு செயல்முறைக்கு செல்லாமல், கட்டுப்படுத்தப்பட்ட முறையில் தாமாகவே தீர்வு காண முடியும். இது, செலவையும் நேரத்தையும் குறைக்கும்.

மேலும், அரசின் வரி பாக்கிகள் தானாகவே பாதுகாப்பான கடனாக கருதப்பட மாட்டாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால், கடன் வழங்குபவர்களின் முன்னுரிமை பாதுகாக்கப்படுகிறது.

மற்றொரு முக்கிய மாற்றம் - நிறுவனங்கள் தன்னார்வமாக மூடப்பட்ட பின், சூழ்நிலை மேம்பட்டால் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், திவால் செயல்முறை மிகுந்த முன்னேற்றம் அடைந்த பின், வழக்கை திரும்ப பெற அனுமதி இல்லை.

அதேபோல், தவறான நோக்கத்துடன் தாக்கல் செய்யப்படும் திவால் மனுக்களுக்கு, ஒரு லட்சம் முதல் 2 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இது சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும். தவறான திவால் மனு தாக்கல் செய்பவர்களை தடுத்து நிறுத்தும்.

இம்மாற்றங்கள் கடன் வழங்குபவர்களுக்கு அதிக அதிகாரம் அளிப்பதுடன், தீர்வு செயல்முறையை வேகமாக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளன. எனினும், சிலர் இது நிறுவனங்களுக்கு கடுமையான சூழலை உருவாக்கும் என்று கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, தற்காலிக நிதி சிக்கலில் உள்ள நிறுவனங்கள், விரைவாக திவால் நிலைக்கு தள்ளப்படக் கூடும் என்ற அச்சம் உள்ளது.

மொத்தத்தில், ஐ.பி.சி., - 2.0 இந்தியாவின் நிதி அமைப்பை மேலும் ஒழுங்குபடுத்தும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. ஆனால், அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது நடைமுறையில் தான் தெரியும். இது முந்தைய சட்டத்தை விட சிறப்பாக செயல்படுமா அல்லது சில நிறுவனங்களுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது காலப்போக்கில் தெளிவாகிவிடும்.

புதிய 6 மாற்றங்கள்


திவால் தொடக்க தேதியில் தெளிவு

ஒரே நிறுவனத்திற்கு பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால், முதல் மனு தாக்கல் செய்யப்பட்ட தேதியே திவால் தொடக்கமாக கருதப்படும். இதனால் தாமதம் மற்றும் குழப்பம் குறையும்.

லாக் - இன் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்வு

திவால் அறிவிப்புக்கு முன் நடந்த சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளை இரண்டு ஆண்டுகள் வரை ஆய்வு செய்ய முடியும். இது மோசடி நடவடிக்கைகளைத் தடுக்கும்.

சி.ஐ.ஐ.ஆர்.பி., அறிமுகம்

புதிய கடன்தாரர் துவங்கும் திவால் தீர்வு நடைமுறை வாயிலாக, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நீதிமன்ற செயல்முறைக்கு வெளியே கட்டுப்பாட்டுடன் தீர்வு முயற்சிகளை தொடங்கலாம். இது வேகமான மற்றும் குறைந்த செலவிலான தீர்வை வழங்கும்.

நிலுவைத் தொகைகளின் முன்னுரிமை குறைப்பு

முன்னர், ரெயின்போ பேப்பர் வழக்கின் அடிப்படையில் அரசு வரித்தொகைகள் முன்னுரிமை பெற்றன. புதிய சட்டம் இதை மாற்றி, கொலேட்டிரல் பாதுகாப்பு கொண்ட கடனாளி களின் முன்னுரிமையை உறுதிப்படுத்துகிறது.

முடிவை மாற்றும் வாய்ப்பு

சில சூழ்நிலைகளில், நிறுவனங்கள் தங்களின் வர்த்தக மூடல் குறித்த முடிவை மாற்றி கொண்டு, மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.

தவறான மனுக்களுக்கு அபராதம்

தவறான அல்லது தீய நோக்கத்துடன் தாக்கல் செய்யப்படும் மனுக்களுக்கு, 1 லட்சம் முதல் 2 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us