சீனாவுக்கு இரும்பு தாதுவா? என்.எம்.டி.சி. விளக்கம்!
சீனாவுக்கு இரும்பு தாதுவா? என்.எம்.டி.சி. விளக்கம்!
ADDED : ஜன 19, 2024 09:48 PM

புதுடில்லி:உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யவே இரும்பு தாது உற்பத்தியை அதிகரிப்பதாகவும்; சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் என்.எம்.டி.சி., எனும் தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
பொதுத்துறை நிறுவனமான என்.எம்.டி.சி., அதிகரித்து வரும் உள்நாட்டு உருக்குத் தொழிலின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இரும்புத் தாது உற்பத்தியை அதிகரிப்பதாக கூறியுள்ளது.
நாட்டின் இரும்புத் தாது தேவை, வரலாற்று உச்சத்தில் உள்ளதாகவும்; உள்நாட்டு உருக்கு உற்பத்தியாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய நிறுவனம் உறுதிபூண்டுள்ளதாகவும் என்.எம்.டி.சி., மேலும் தெரிவித்துள்ளது.
இரும்புத்தாது ஏற்றுமதி விலைகள் அதிகரித்து வரும் போதிலும், உள்நாட்டு சந்தையில் நிகர விற்பனை சிறப்பாக உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவுக்கு இரும்பு தாது ஏற்றுமதி செய்ய என்.எம்.டி.சி., திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று நிறுவனம் மறுத்துள்ளது.
உருக்கு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்நிறுவனம், நாட்டின் மிகப்பெரிய இரும்புத் தாது உற்பத்தி நிறுவனமாகும்.
இது உள்நாட்டு இரும்புத் தாது தேவையில் 20 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. வரும் 2030ம் ஆண்டுக்குள் 10 கோடி டன் இரும்புத் தாதுக்களை உற்பத்தி செய்ய இந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துஉள்ளது.
சீனாவுக்கு இரும்பு தாது ஏற்றுமதி செய்ய என்.எம்.டி.சி., திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் உலா வரும் நிலையில், அது குறித்து நிறுவனம் விளக்கமளித்துள்ளது