தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ யு.பி.ஐ.,யில் செலவிடும் போது வரும் 'ஸ்கிராட்ச் கார்டு' பயன் தருமா?

 யு.பி.ஐ.,யில் செலவிடும் போது வரும் 'ஸ்கிராட்ச் கார்டு' பயன் தருமா?

 யு.பி.ஐ.,யில் செலவிடும் போது வரும் 'ஸ்கிராட்ச் கார்டு' பயன் தருமா?


ADDED : மே 18, 2026 04:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 18, 2026 04:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்னும் ஆறு ஆண்டுகளில் ஓய்வு பெற போகிறேன். பிளாட் வாங்கலாம் என்று திட்டமிடுகிறேன். வங்கியில் கடன் கொடுப்பார்களா? ஆர். ராதாகிருஷ்ணன், சேலம் தாராளமாக. ஒரு சில வங்கிகள், திருப்பி செலுத்துவதற்கான வயது வரம்பை 70 வரை கூட நீட்டித்திருக்கிறார்கள். அவர்களை பொறுத்தவரை கடனுக்கு அடமானமாக சொத்து கிடைத்து விடுவதால், பிரச்னை இல்லை.

ஆனால், ஓய்வு நெருங்கும் வேளையில் இத்தகைய முதலீடுகளை செய்ய வேண்டுமா என்பதை நீங்கள் தான் யோசித்து முடிவு செய்ய வேண்டும். பலவிதமான அனுமான பிழைகள் உள்ளன.

பலருக்கும், ஓய்வுக்காலத்தில் மாதச்செலவு எவ்வளவு ஆகும் என்பதை பற்றி தீர்மானமான கணக்கு இல்லை. தொடர் வருமானத்தை உருவாக்கும் இனங்களில் முதலீடுகள் இல்லை. எல்லாவற்றுக்கும் மேல் உடல் ஆரோக்கியம் பற்றிய அதீத நம்பிக்கை.

இவையெல்லாம் சேர்ந்து, ஓய்வு கால வாழ்க்கையை மிகுந்த சிரமத்துக்குள்ளாகி விடுவதை கண்கூடாக பார்க்கிறோம்.

உண்மையிலேயே வீடு வேண்டுமா, ஓய்வு கால சேமிப்புகளை இதில் கொண்டு போய் போட வேண்டுமா, கடனை முழுமையாக திருப்பி செலுத்த போதுமான வருமான ஆதாரம் இருக்கிறதா என்றெல்லாம் கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள்.

இவற்றுக்கெல்லாம் 'ஆம்' என்பது உங்கள் மனது சொல்லும் பதில் என்றால், துணிந்து வீட்டுக்கடன் வாங்குங்கள்.

ஒவ்வொரு முறை யு.பி.ஐ. பயன்படுத்தும் போதும், 'ரிவார்டு'க்கான ஸ்கிராட்ச் கார்டு வருகிறது. அதை நான் தொட்டதே இல்லை. அதை பயன்படுத்தலாமா? தினேஷ் செல்லப்பன், மேற்கு மாம்பலம், சென்னை யு.பி.ஐ.யை மேன்மேலும் பயன்படுத்தி, உங்களை செலவு செய்ய வைக்கும் உத்தி அது. மிகச்சிறிய தொகை, ரொக்க பணமாக நேரடியாக உங்கள் வங்கி கணக்குக்கு கிடைக்கலாம்.

பெரும்பாலும் வேறு ஏதேனும் பொருட்களையோ, சேவைகளையோ வாங்கும் போது, குறிப்பிட்ட சதவீதம் தள்ளுபடிக்கான கூப்பன்கள் கிடைக்கலாம்.

இவற்றில் பெரும்பாலான பொருட்கள் உங்களுக்கு பயன்படாதவையாகவே இருக்க வாய்ப்புண்டு. சில நேரங்களில், மளிகை சாமான் உள்ளிட்ட சில அத்தியாவசிய தேவைகள் அல்லது ஆட்டோ பயண செயலிகளில் சில சலுகைகள் கிடைக்கலாம். அவை பயனுடையதாக இருக்கும்.

நேரம் இருக்கும் போது, அந்த ரிவார்டுக்கான படங்களை சுரண்டி பாருங்கள். முடிந்தால், ஒரு சில சலுகைகளைச் சேர்த்து வைத்து பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். என்ன ஒன்று, அந்த ரிவார்டுகளுக்கு ஆசைப்பட்டு, பொருட்களை வாங்கி குவித்துவிடாதீர்கள். கட்டுப்பாடு உங்களிடம் தான் இருக்க வேண்டும்.

ரியல் எஸ்டேட் முதலீட்டு டிரஸ்டுகளில் முதலீடு செய்வது பற்றி நீங்கள் எழுதியிருந்தீர்கள். ஆனால், அவையும் ரிஸ்க் நிறைந்தவை தான் என்கிறார் என் நண்பர். உண்மை என்ன? எம். சிவதாஸ், திருவள்ளூர் ரியல் எஸ்டேட் முதலீட்டு டிரஸ்டுகள், உள்கட்டுமான முதலீட்டு டிரஸ்டுகள் உள்ளிட்ட இதுபோன்ற முதலீட்டு டிரஸ்டுகளில் அடிப்படையில் ஒரு பிரச்னை உண்டு.

கடந்த முறை சொன்னது போல், அவர்கள் ஈட்டும் வருவாயில் 90 சதவீதத்தை ஈவுத்தொகையாக வழங்கி விட வேண்டும் என்று செபி உத்தரவு இருக்கிறது.

அப்படி வழங்கும் போது, புதிய சொத்துகளை வாங்குவதற்கோ, பழையவற்றை புதுப்பிப்பதற்கோ அந்நிறுவனங்களிடம் போதிய முதலீடு இருக்காது.

பல்வேறு காரணங்களால் வாடகை வசூல் ஆகாமல் போகலாம், இடத்துக்கான தேவையே குறைந்து போகலாம், ஒவ்வோர் ஆண்டும் வாடகையை உயர்த்த முடியாமல் போகலாம், வாடகைக்கு இருக்கும் பெருநிறுவனங்கள் காலி செய்துகொண்டு வெளியேறி விடலாம், கட்டடங்கள் பழையதாகலாம், அவற்றை புதுப்பிக்க மீண்டும் மீண்டும் செலவு செய்ய வேண்டியிருக்கலாம்.

எல்லாவற்றுக்கும் மேல், ரியல் எஸ்டேட் என்றாலே அதில் கணக்குகள் சீராக இராது என்றொரு எண்ணமும் இருக்கிறது.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே, இது போன்ற முதலீட்டு டிரஸ்டு முதலீடுகள் வேண்டாம் என்று சொல்லப்படுகிறது. ஒரு விஷயம் முக்கியம்.

எல்லா முதலீடுகளையும் பங்குச்சந்தை, மியூச்சுவல் பண்டுகள், கடன் பத்திரங்கள் என்று குவிக்காமல், வேறு முதலீட்டு இனங்கள் ஏதேனும் இருந்தால் அதிலும் போடலாமே என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

அங்கே தான் ஒரு சின்ன ஜன்னலை இந்த முதலீட்டு டிரஸ்டுகள் திறந்து விட்டுள்ளன. இதில் எல்லா தொகையையும் போட வேண்டாம். உங்கள் மொத்த முதலீட்டில் 5 சதவீதம் அளவுக்கு முதலீட்டு டிரஸ்டுகளில் போடலாம்.

'பாசிவ்' மியூச்சுவல் பண்டுகள் என்று சொல்கிறார்களே, அப்படி என்றால் என்ன? விளக்கவும்? ஜி. க்ளெமெண்ட், வாட்ஸாப் ஒவ்வொரு மியூச்சுவல் பண்டு திட்டத்தையும் ஒரு திறமையான மேலாளர் நிர்வகிப்பார். எந்த பங்கு, லாபம் ஈட்டக்கூடும் என்பதை கூர்ந்து ஆய்வு செய்து, வாங்கி போட்டு, உரிய காலம் வரை காத்திருந்து, சந்தையின் சராசரி வளர்ச்சியை விட அதிக லாபத்தை முதலீட்டாளருக்கு ஈட்டித்தர அவர் முயல்வார்.

இத்தகைய முதலீட்டு முறையை 'ஆக்டிவ்' பண்டுகள் என்று அழைப்பர்.

இதற்கு நேர் எதிராக இருப்பது தான் 'பாசிவ்' பண்டுகள். அதாவது, அங்கேயும் பண்டு திட்டத்துக்கு பொறுப்பாக ஒரு மேலாளர் இருப்பார். ஆனால், அவர் சந்தையை முந்தி லாபம் ஈட்ட வேண்டும் என்ற பரபரப்போடு இயங்க மாட்டார்.

அந்த குறிப்பிட்ட பண்டு எந்த குறியீட்டை (உதாரணமாக, நிப்டி 50 அல்லது சென்செக்ஸ்) அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதோ, அந்தக் குறியீட்டில் உள்ள அதே பங்குகளை, அதே அளவில் வாங்கி போடுவார்.

அதாவது, குறியீடு எவ்வளவு சதவீதம் வளர்கிறதோ, அதற்கு இணையான வளர்ச்சியை இத்தகைய மியூச்சுவல் பண்டு திட்டங்களும் பெறும்.

நமது நாட்டில், 740 பாசிவ் பண்டுகள் உள்ளன. அவற்றில், 360 இண்டெக்ஸ் பண்டுகள், 328 இ.டி.எப்.கள், 52 பண்டு ஆப் பண்டுகள். 2020ல் இத்தகைய பாசிவ் பண்டுகளின் மொத்த முதலீட்டுத் தொகை 1.60 லட்சம் கோடியாக இருந்தது. இப்போது அதுவே 14.60 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

இதில் இருந்து ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளலாம். பல பண்டு மேலாளர்களால், பெரிய அளவில் லாபம் ஈட்டித்தர முடியவில்லை. அவர்கள் இண்டெக்ஸ் என்ன அளவுக்கு வளர்ந்திருக்கறதோ, அந்த அளவுக்கோ அல்லது அதைவிட சற்றே அதிகமாகவோ தான் வருவாய் ஈட்டியுள்ளனர்.

அதற்கு எதற்கு கூடுதல் நிர்வாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று வாடிக்கையாளர் நினைக்கிறார்கள். அதனால் தான் நிர்வாக கட்டணம் குறைவான, அதேநேரம், இண்டெக்ஸ் என்ன அளவுக்கு வளர்கிறதோ, அதன் பயனை ஏற்படுத்தித் தரும் பாசிவ் பண்டுகளே போதும் என்ற மனநிலைக்கு வந்துஉள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us