ADDED : மே 11, 2026 02:46 AM
திருப்பூர்: 'தமிழக அரசு, பின்னலாடை தொழில் வளர்ச்சி வாரியம் அமைத்து, ஆடை உற்பத்தி தொழிலை மேம்படுத்த வேண்டும்,' என, ஏ.ஐ.பி.சி., எனும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் சக்திவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக முதல்வருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
ஆயத்த ஆடைத் தொழிலுக்கு தமிழக பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு உண்டு. திருப்பூர் கிளஸ்டர், இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில், 68 சதவீத பங்களிக்கிறது. பெரும்பாலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் இங்கு உள்ளன. இத்துறையில் ஆண்டுக்கு, 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வர்த்தகம் நடக்கிறது.
இதில் பெண்கள் உட்பட 10 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் உள்ளனர். இந்திய ஆடைத் துறையின் எதிர்காலம் மிகவும் நம்பிக்கையளிப்பதாக உள்ளது; குறிப்பாக, தமிழகம் முன்னோடியாக உள்ளது. மத்திய அரசு, 37 நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் செய்துள்ளதால் புதிய சந்தை வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
அடுத்து வரும் பத்தாண்டுகள் ஆடைத் தொழிலுக்கு மிகவும் சாதகமான ஆண்டாக அமையும். நீடித்த நிலையான ஆடை உற்பத்திக்கான உலகளாவிய மையமாக உருவெடுக்கும்.
தொழில் வளர்ச்சிக்காக, தமிழக முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி ஊக்குவிக்க வேண்டும். தொழிலாளர் தங்குமிடங்கள் போக்குவரத்து வசதிகள், குறு. சிறு நிறுவனங்களுக்கான நிதியுதவி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மற்றும் பயன்பாடு, வர்த்தக சந்திப்பு நிகழ்வுகள் நடத்துவது போன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
ஒரு லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி இலக்கை அடைய, தமிழக அரசு பின்னலாடை தொழில் வளர்ச்சி வாரியம் அமைத்து, இத்துறையை மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
