ADDED : ஜன 31, 2026 01:06 AM

பிஷ்கெக்: இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விலங்குகள் மற்றும் விலங்கு சார்ந்த பொருள்களுக்கு, கிர்கிஸ்தான் நாடு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து கிர்கிஸ்தானின் சுகாதார துறை தெரிவித்துள்ளதாவது:
மேற்கு வங்க மாநிலத்தில், இரண்டு பேர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தல்படி நிபா வைரஸ் மனிதர்கள் வாயிலாகவும், வவ்வால், பன்றிகள் போன்ற விலங்குகளிடம் இருந்தும், விலங்கில் இருந்து தயாரிக்கப்படும் உணவு பொருள்கள் வாயிலாகவும் பரவுகிறது.
சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து நாடுகளில் இந்தியாவிலிருந்து வருபவர்களை சோதனைக்கு பிறகே அனுமதிக்கின்றனர்.
கிர்கிஸ்தானின் தலைநகர் பிஷ்கேக் மற்றும் ஓஷ் சர்வதேச விமான நிலையங்களில் உடல் வெப்பநிலை உள்ளிட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயிருள்ள விலங்குகள் மற்றும் விலங்கு சார்ந்த உணவுப் பொருள்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.

