ADDED : ஜூன் 21, 2026 03:12 AM

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் விளையும் விதையில்லா லிச்சி பழம் 1,000 கிலோ, முதன்முறையாக இத்தாலிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
உத்தராகண்டின் டேராடூனை சேர்ந்த லிச்சி பழம் அதன் தனித்துவமான இனிப்பு சுவை மற்றும் நறுமணத்திற்கு புகழ்பெற்றது. ஆனால், அறுவடைக்கு பின் விரைவில் கெட்டுப்போகும் தன்மை கொண்டதால், தொலைதூர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது இதுவரை சவாலாகவே இருந்து வந்தது.
தற்போது மேம்பட்ட பேக்கேஜிங் தொழில்நுட்பம் மற்றும் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் குளிர்சாதன போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் தரம் பாதுகாக்கப்படுகிறது. அபெடா மற்றும் உத்தராகண்ட் தோட்டக்கலை துறையின் உதவியுடன் இந்த சீசனில் 1,000 கிலோ பழம், பாதுகாப்பான அம்சங்களுடன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இத்தாலிக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த லிச்சி பழங்கள் உரிய தரத்துடன் நுகர்வோருக்கு சென்று சேர்ந்து விட்டால் வருங்காலத்தில் ஐரோப்பாவின் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி விரிவடைய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
