தயாரிப்பு துறை உற்பத்தி 3 மாத உச்சத்தில் வளர்ச்சி
தயாரிப்பு துறை உற்பத்தி 3 மாத உச்சத்தில் வளர்ச்சி
ADDED : ஜூன் 02, 2026 06:49 AM

புதுடில்லி: வலுவான உள்நாட்டு தேவை மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்கள் காரணமாக, நாட்டின் தனியார் துறை உற்பத்தி வளர்ச்சி மே மாதத்தில், மூன்று மாதங்களில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. ஹெச்.எஸ்.பி.சி., வங்கியின் மாதாந்திர பி.எம்.ஐ., அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஏப்ரல் மாதத்தில் 54.70 புள்ளிகளாக இருந்த தயாரிப்பு துறை பி.எம்.ஐ., குறியீடு, மே மாதத்தில் 55 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இது கடந்த மூன்று மாதங்களில் காணப்பட்ட அதிகபட்ச வளர்ச்சியாகும். பொதுவாக இக்குறியீடு 50 புள்ளிகளுக்கு மேல் இருந்தால் அது வளர்ச்சியை குறிக்கும்.
அந்த வகையில், வலுவான உள்நாட்டு தேவை மற்றும் புதிய ஆர்டர்களால் தயாரிப்பு துறையின் உற்பத்தி பெருமளவு அதிகரித்துள்ளது.
எனினும், புதிய ஏற்றுமதி ஆர்டர்களின் வளர்ச்சி சற்று மிதமாகவே இருந்தது. மேற்காசிய போர் காரணமாக எரிபொருள், போக்குவரத்து மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்ந்ததால் நிறுவனங்களின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.
இதனால், எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு நிறுவனங்கள் முன்னெச்சரிக்கையாக அதிக அளவில் பொருட்களை இருப்பு வைத்து வருகின்றன.
உற்பத்திக்கான செலவுகள் கணிசமாக அதிகரித்த போதிலும், விற்பனை விலை அதிகரிப்பு கணிசமாக குறைந்துள்ளது. இது உற்பத்தியாளர்களின் லாப வரம்பில் சரிவை ஏற்படுத்தக்கூடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
