ADDED : நவ 05, 2025 11:57 PM

மும்பை:டாடா அறக்கட்டளை உடனான தன் நீண்ட கால உறவை முடித்துக் கொள்ளும் வகையில், மெஹ்லி மிஸ்திரி ராஜினாமா செய்து உள்ளார்.
அவரது பதவிக்காலத்தை நீட்டிப்பது தொடர்பாக கடந்த 28ம் தேதி நடந்த அறக்கட்டளை உறுப்பினர்கள் கூட்டத்தில், அதன் தலைவர் நோயல் டாடா மற்றும் சிலர் எதிர்த்து வாக்களித்தனர்.
இந்நிலையில், அவர் எழுதியுள்ள கடிதத்தில், நிறுவனத்தின் நலனை விட பெரிது ஏதுமில்லை; டாடா குழுமத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் விலகுவதாக தெரிவித்துள்ளார்.
டாடா அறக்கட்டளை தேவையற்ற சர்ச்சைகளில் சம்பந்தப்படுவதை தவிர்ப்பது அனைவரது கடமை என்று ரத்தன் டாடா கருதியதாகவும் அதையே தானும் கருதுவதாகவும் மெஹ்லி மிஸ்திரி தன் கடிதத்தில் கூறியுள்ளார்.
மெஹ்லி மிஸ்திரி, எம். பலோஞ்சி குழுமத்தின் மூத்த அதிகாரி. அக்குழுமம், டாடா அறக்கட்டளையில் கிட்டத்தட்ட 18 சதவீத பங்கு வைத்துள்ளது. அதன் அடிப்படையில் முன்னாள் தலைவராக இருந்த, மறைந்த சைரஸ் மிஸ்திரியின் நெருங்கிய உறவினர் மெஹ்லி மிஸ்திரி.

