'தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளால் குறுந்தொழில்களுக்கு பாதிப்பு'
'தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளால் குறுந்தொழில்களுக்கு பாதிப்பு'
ADDED : ஆக 31, 2026 03:20 AM

புதுடில்லி: மத்திய அரசின் தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாகவும், எனவே அவற்றை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் ஜி.டி.ஆர்.ஐ., எனப்படும் சர்வதேச வர்த்த ஆய்வு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தரக்கட்டுப்பாட்டு உத்தரவுகளின் கீழ் கட்டாய தரச்சான்றிதழ் பெற வேண்டிய நடைமுறை உற்பத்தி செலவை அதிகரித்து, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை பாதிப்பதுடன், பொருட்களின் விலையையும் உயர்த்துகிறது என, அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து ஜி.டி.ஆர்.ஐ., நிறுவனர் அஜய் ஸ்ரீவத்சவா கூறியதாவது:
தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் நுகர்வோரை பாதுகாக்கும் நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும். அவை இறக்குமதி கட்டுப்பாடுகளாகவோ, உரிமம் பெறுவதற்கான தடைகளாகவோ மாறக்கூடாது. இதற்காக மறுஆய்வு செய்வது அவசியம்.
இந்தியாவின் தரக்கட்டுப்பாட்டு நடைமுறைகளை மற்ற நாடுகளும் பின்பற்றினால், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளை ஏற்கனவே பூர்த்தி செய்யும் இந்திய பொருட்களுக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியாக சான்றிதழ் பெற வேண்டிய நிலை ஏற்படலாம்.
மேலும், அதிகாரிகள் ஆய்வு செய்வதற்காக மேற்கொள்ளும் பயண செலவு, தினசரி படி, உரிமம் மற்றும் புதுப்பித்தல் கட்டணம், சோதனைக் கட்டணம் உள்ளிட்ட கூடுதல் செலவுகளையும் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் ஏற்றுமதி செலவு அதிகரித்து, சரக்குகள் அனுப்புவதில் தாமதம் ஏற்படுவதுடன், வர்த்தகத்துக்கு புதிய தடைகள் உருவாகும்.
விரிவான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் பாதிக்கப்படுவதுடன், பொருட்களின் விலை அதிகரித்து, உற்பத்தி முதலீடுகளும் பாதிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
