ADDED : ஆக 08, 2026 06:36 AM

புதுடில்லி: மொபைல் போன்களுக்கான மெமரி சிப் விலைகள் உயர்ந்திருப்பதால், டிஸ்பிளே பேனல் உற்பத்தியாளர்கள் தங்களது உபரி உற்பத்தியை புதுப்பிக்கப்பட்ட மொபைல் போன்கள் சந்தைக்கு திருப்பி விட தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக, 2026ம் ஆண்டின் முதல் காலாண்டில் புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கான டிஸ்பிளே பேனல் வினியோகம், புதிய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுக்கான வினியோகத்தை முதன் முறையாக முந்தியுள்ளது.
இதுகுறித்து ஆய்வறிக்கை கூறுவதாவது:
2026 ஜனவரி - மார்ச் காலாண்டில், புதுப்பிக்கப்பட்ட போன்களுக்கான டிஸ்பிளே வினியோகம் ஆண்டுக்கு 20 சதவீதம் அதிகரித்து 29.8 கோடியாக உள்ளது. அதே காலகட்டத்தில் புதிய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுக்கு 28.9 கோடி டிஸ்பிளே பேனல்கள் மட்டுமே வினியோகிக்கப்பட்டன.
புதிய ஸ்மார்ட்போன்களுக்கான டிஸ்பிளே பேனல் தேவை, 2026ம் ஆண்டில் 12 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெமரி சிப் விலை உயர்வு காரணமாக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் உற்பத்தி திட்டங்களை குறைத்து வருவதே இதற்கு முக்கிய காரணமாகும்.
