தொழில் துறை கோரிக்கைக்கு ஏற்ப வரும் ஆண்டுகளில் புதிய திட்டங்கள் எம்.எஸ்.எம்.இ., இயக்குநர் தகவல்
தொழில் துறை கோரிக்கைக்கு ஏற்ப வரும் ஆண்டுகளில் புதிய திட்டங்கள் எம்.எஸ்.எம்.இ., இயக்குநர் தகவல்
ADDED : நவ 08, 2025 03:34 AM

திருப்பூர்: “எம்.எஸ்.எம்.இ., துறைக்கென அடுத்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு புதிய திட்டங்கள் துவங்கப்படும்,” என, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இயக்குநர் வினாம்ரா மிஸ்ரா தெரிவித்தார்.
மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை சார்பில், நாடு முழுதும் உள்ள ஜவுளி 'கிளஸ்டர்' வாரியாக, கலந்தாய்வும், பயிலரங்கமும் நடத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில், திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் உடனான கலந்தாய்வு மற்றும் பயிலரங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடந்தது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம், தென்னிந்திய இறக்குமதி இயந்திர பின்னல் துணி உற்பத்தியாளர் சங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம், திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் இந்திய தொழிற்கூட்டமைப்பு பிரதிநிதிகள் தங்கள் துறை சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இயக்குநர் வினாம்ரா மிஸ்ரா பேசியதாவது:
திருப்பூர் பின்னலாடை தொழிலில் வலுவான போட்டித்திறன் பிரதிபலிக்கிறது. இயற்கைக்கு எவ்வித பாதிப்பையும் உருவாக்காத, உயர்தர உற்பத்தி தொழில்நுட்ப சான்றிதழ் பெற வேண்டும்.
திருப்பூரில், 2022ம் ஆண்டு நிலவரப்படி, 100 நிறுவனங்கள் சான்றிதழ் பெற்றுள்ளது பாராட்டுக்கு உ ரியது.
இந்தியாவிலேயே திருப்பூரில் மட்டும் தான், 50 சதவீதம் அளவுக்கு, குறு, சிறு உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன.
தொழில் அமைப்பினரின் கோரிக்கைகள், அரசு கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
துறையினரின் கோரிக்கைகள் அடிப்படையில் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில், பல்வேறு புதிய திட்டங்கள் துவங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

