குழந்தைகள் உணவில் நச்சுப்பொருள் வெளிநாடுகளில் 'நெஸ்லே' வாபஸ்
குழந்தைகள் உணவில் நச்சுப்பொருள் வெளிநாடுகளில் 'நெஸ்லே' வாபஸ்
UPDATED : ஜன 09, 2026 04:45 PM
ADDED : ஜன 09, 2026 01:06 AM

புதுடில்லி: நச்சுப்பொருள் கலந்து இருப்பதாக புகாருக்கு உள்ளான உணவு தயாரிப்பு களை, இந்தியாவில் இறக்குமதியோ விற்பனையோ செய்ய வில்லை என 'நெஸ்லே இந்தியா' நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த நெஸ்லே நிறுவனம், மூலப்பொருள் ஒன்றில் தரக்குறைபாடு கண்டறியப்பட்டதை தொடர்ந்து, குழந்தைகளுக்கான தன் ஊட்டச்சத்து தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் அனைத்து 'அராச்சிடோனிக் ஆசிட்' மற்றும் அது தொடர்பான எண்ணெய் கலவைகளை சோதனைக்கு உட்படுத்திஉள்ளது.
இதில், 'பேசிலஸ் செரியஸ்' எனும் பாக்டீரியாவால் உருவாகும் நச்சுப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பல ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, மெக்ஸிகோ உட்பட 37 நாடுகளில் வினியோகித்த குழந்தைகளுக்கான எஸ்.எம்.ஏ., - பி.இ.பி.ஏ., மற்றும் என்.ஏ.என்., ஆகிய ஊட்டச்சத்து தயாரிப்புகளை சந்தையில் இருந்து திரும்ப பெறுவதாக அறிவித்து உள்ளது.
இந்தியாவில் இல்லை
இந்நிலையில், நெஸ்லே இந்தியா நேற்று வெளியிட்ட அறிக்கை:
பல நாடுகளில் திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள உணவு தயாரிப்புகளை, நெஸ்லே இந்தியா இதுவரை இறக்குமதியோ, விற்பனையோ செய்யவில்லை. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து ஊட்டச்சத்து தயாரிப்புகளும், உள்நாட்டில் தயாரிக்கப்படுபவை. இந்த தயாரிப்புகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., விதிகள் மற்றும் தரக்கட்டுப்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்வதை உறுதி செய்கிறோம்.
முன்னணி நிறுவனம் வினியோகம் செய்த மூலப்பொருளில் கண்டறியப்பட்ட தரக்குறைபாடு காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில ஐரோப்பிய நாடுகளில் குறிப்பிட்ட தயாரிப்புகள் திரும்ப பெறப்படுகின்றன.இதுவரை புகாருக்குள்ளான தயாரிப்பு காரணமாக எந்தவொரு உடல்நல பாதிப்பும் ஏற்பட்டதாக உறுதியாகவில்லை.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.
* எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., விதிகள் மற்றும் தரக்கட்டுப்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்கிறோம்
* திரும்ப பெறப்படும் உணவு தயாரிப்புகள் இந்தியாவில் விற்கப்படவில்லை என நெஸ்லே விளக்கம்

