ADDED : செப் 04, 2025 11:31 PM

திருப்பூர்:'சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பசுமை சார் உற்பத்தி எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், புதிய சந்தை வாய்ப்பை உருவாக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது' என, தொழில் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆடை மற்றும் ஜவுளி பொருட்கள் மீது அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி, இந்திய ஆடைத்துறையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகபட்ச வரி விதிப்பால், சரக்கு ஏற்றுமதி கேள்விக்குறியாக மாறியுள்ளது.
உலகம் முழுதும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான எதிர்பார்ப்பு, சட்டமாக மாறிக் கொண்டிருக்கிறது. அவ்வகையில், இந்திய ஆடைத்துறை மாற வேண்டிய தருணம் வந்து விட்டது என்று, தொழில் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து 'ஸ்டார்ட்அப் இந்தியா' திட்ட வழிகாட்டி ஆலோசகர் ஜெய்பிரகாஷ் கூறுகையில், “பசுமை சார் உற்பத்தியில் சாதனை படைத்துள்ள இந்திய ஆடைத்துறை, அத்தகைய சாதனையை விளக்கி, புதிய வர்த்தக உறவுகளை உருவாக்க முடியும்.
''நீண்ட, நெடிய மாற்று வர்த்தக வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது,” என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.