UPDATED : அக் 30, 2026 04:17 PM
ADDED : அக் 30, 2026 04:14 PM

ரூ.1.47 கோடி திரட்டிய விரிடியன் இங்னி புரோபல்ஷன்
சென்னையைச் சேர்ந்த, மின்சார வாகன மோட்டார் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான 'விரிடியன் இங்னி புரோபல்ஷன்', 1.47 கோடி ரூபாய் தொடக்க கட்ட நிதி திரட்டியுள்ளது. இன்ப்ளெக்ஷன் பாயிண்ட் வென்ச்சர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த முதலீட்டை வழங்கியுள்ளன. திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு சோதனை உற்பத்தித் திட்டங்களைத் தொடங்கவும், சிறிய அளவிலான உற்பத்தி ஆலையை அமைக்கவும், ’அராய்’ மற்றும் ஐகேட் சான்றிதழ்களைப் பெறவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
மின் வாகனங்கள், ட்ரோன்கள், ரோபோட்டிக்ஸ் மற்றும் தொழில்முறை இயந்திரங்களுக்கான மின்சார உந்துவிசை அமைப்புகளை உள்நாட்டிலேயே விரிடியன் தயாரித்து வருகிறது. மேலும், அரிய வகை தாதுக்கள், காந்தங்களை பயன்படுத்தாமல் மோட்டார்களை இந்நிறுவனம் வடிவமைக்கிறது. தமிழக அரசின் 'சிப்காட்', மத்திய அரசின் 'மெய்ட்டி ஸ்டார்ட்அப் மையம்' மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் 'நிதி பிரயாஸ்' திட்டம் ஆகியவை வாயிலாக 53.75 லட்சம் ரூபாய் மானிய நிதியையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது.
வென்ட்டப் டேட்டாலேப்ஸ் நிறுவனத்தில் ரூ 25 கோடி முதலீடு
ஹார்டுவேர் மற்றும் ஆழ் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தேவையான உதிரிபாகங்களை தயாரித்து வழங்கும் பெங்களூருவைச் சேர்ந்த 'வென்ட்டப் டேட்டாலேப்ஸ்' நிறுவனம், கிட்டத்தட்ட 25 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது. 'ரெய்ன்மேட்டர்' மற்றும் 'யூனிகார்ன் இந்தியா வென்ச்சர்ஸ்' அமைப்புகள் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன. சந்தீப் நாயர், வாசிம் அன்க்லி மற்றும் ஜோசப் பனக்கல் ஆகியோரால் 2021ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் உதவியோடு உதிரிபாக உற்பத்தி, பரிசோதனை மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
கேரளா ஸ்டார்ட்அப் மிஷனின் ஆதரவு பெற்ற இந்நிறுவனத்தின் வருவாய், 2025–26 நிதியாண்டில் 5 மடங்கு அதிகரித்து 10 கோடி ரூபாயை எட்டியுள்ளது.திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு பொறியியல் நிபுணர்களைப் பணியமர்த்தவும், துல்லிய உற்பத்தி உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
