ஆன்லைன் மீட்டிங் தளம் 'வாணி' 'ஜோஹோ' நிறுவனம் அறிமுகம்
ஆன்லைன் மீட்டிங் தளம் 'வாணி' 'ஜோஹோ' நிறுவனம் அறிமுகம்
ADDED : அக் 02, 2025 11:17 PM

சென்னை :கூகுள் மீட், ஜூம், மைக்ரோசாப் டீம் போன்ற ஆன்லைன் மீட்டிங் தளத்தை போல, 'வாணி' என்ற பெயரில், 'ஜோஹோ' நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனமான ஜோஹோ, பணியிட ஒருங்கிணைப்பு தளமான வாணியை அறிமுகம் செய்துள்ளது. வழக்கமான உரையாடலாக கூட்டம் நடத்துவதில் இருந்து மேலும் மேம்பட்ட வசதிகளாக திட்டமிடல், ஒன்றிணைந்து கண்டுபிடித்தல், வீடியோவழி உரையாடல், யோசனை உருவாக்கம் மற்றும் பிரச்னைகளுக்கு தீர்வு காணல் ஆகியவற்றிலும் இதில் ஈடுபடலாம்.
அனைத்து துறைகளையும் ஒரே நேரத்தில் ஒருங்கிணைக்கும், இடையில் செயலி மாறுவது தேவைஇருக்காது மற்றும் சிக்கல் இல்லாத இணைப்பு, வாணியில் சாத்தியமாகும். சிறுதொழில் நிறுவனங்கள் முதல் இதில் பயன்பெறலாம் என்றும் இதன் தலைவர் கார்த்திகேயன் ஜம்புலிங்கம் தெரிவித்தார்.
'ஸ்பேஸ் அண்டு ஜோன்' மாடலில் வந்துள்ள வாணி தளத்தில் வேலை பாதிப்பின்றி திரையில் பார்த்தபடி, குறுக்கீடு இல்லாமல் பணியை தொடர இயலும் என்று கூறப்பட்டுள்ளது. ஏ.ஐ., பயன்படுத்தப்பட்டு, உடனுக்குடன் மீட்டிங் ஏற்பாடு செய்வதற்கான கருத்துரு, காட்சிகள், வரைபடங்கள், கட்டுரைகளை இதில் ஏற்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், 'அரட்டை' என்ற பெயரில் ஜோஹோ நிறுவனத்தின் சாட்டிங் தளம் பிரபலமாக பேசப்பட்ட நிலையில், தற்போது, மீட்டிங் தளத்தை அது அறிமுகம் செய்துள்ளது.