ADDED : மார் 14, 2024 02:31 AM

புதுடில்லி: வங்கிக் கணக்கு துவக்குவது முதல் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வது வரை, அனைத்துக்கும் ஒரே கே.ஒய்.சி., முறையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், ஒரே கே.ஒய்.சி., கொண்டு வர முன்மொழியப்பட்டு உள்ளது. வங்கிகள், காப்பீடு, மியூச்சுவல் பண்டு, பங்குச் சந்தை போன்ற அனைத்து நிதி துறைகளிலும் வாடிக்கையாளர்களை சரிபார்ப்பதற்கு, ஒரே கே.ஒய்.சி., அமைப்பு திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது வங்கிக் கணக்கு துவங்கும் போதும், மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யும் போதும், காப்பீடில் நுழையும் போதும், வாடிக்கையாளர்கள் தங்கள் கே.ஒய்.சி., விபரங்களை வழங்க வேண்டும். மேலும் அவ்வப்போது அதை புதுப்பிக்க வேண்டும்.
இதுவே ஒரே கே.ஒய்.சி.,யாக இருந்தால், ஒரு வாடிக்கையாளர் தங்கள் விபரங்களை ஒவ்வொரு முறையும் வழங்க வேண்டிய அவசியமில்லை. இதனால், வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை வங்கியில் இணைப்பதற்கான நடைமுறை மற்றும் நேரம் குறையும்.
ஒரே கே.ஒய்.சி., முறைக்கான விதிமுறைகள் வகுப்பது குறித்து, அரசு, நிதி செயலர் சோமநாதன் தலைமையில், நிபுணர் குழு அமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
