ADDED : மே 26, 2026 03:56 AM

சென்னை: கடந்த ஏப்., மாதம் சீசன் தொடக்கத்தில் கிலோ 70 ரூபாய்க்கு விற்பனையான பங்கனபள்ளி மாம்பழத்தின் மொத்த விலை தற்போது 35 ரூபாயாக குறைந்துள்ளது என கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, கோயம்பேடு பழ சந்தை வியாபாரிகள் சங்கத்தின் துணை தலைவர் குமார் கூறியதாவது:
ஆந்திராவின் விஜயவாடா, புத்துார், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கோயம்பேடு சந்தைக்கு அதிகளவில் பங்கனபள்ளி மாம்பழங்கள் வருகின்றன; திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் வருகின்றன.
கடந்த ஏப்., மாதம் சீசன் தொடக்கத்தில் 1 கிலோ 70 ரூபாய்க்கு விற்பனையானது. சில்லரை விலையில் 120 ரூபாய் வரை விற்பனையானது.
தற்போது 35 ரூபாயாக குறைந்துள்ளதால், சில்லரை விலையில் 70 ரூபாய் வரை விற்பனையாகிறது.
பங்கனபள்ளி மாம்பழ சீசனில் தினமும் 70 டன் மாம்பழங்கள் வரும்; தற்போது 40 டன் பழங்கள் தான் வருகின்றன. வரத்து சற்று குறைந்து காணப்படும் நிலையிலும் மாம்பழத்தின் விலை குறைந்துள்ளது. அடுத்த சில நாட்களில் ருமானி, நீலம் மாம்பழங்களின் வரத்து தொடங்கிவிடும்.
கடந்த சில ஆண்டுகளாக மக்களிடையே மாம்பழத்தின் நுகர்வு குறைந்து கொண்டே வருகிறது. அதேபோல் வெப்ப அலை காரணமாகவும் விலை குறைந்திருக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பங்கனபள்ளி மாம்பழம் விலை நிலவரம் ஏப்ரல் மொத்த விலை 70 சில்லரை விலை 120 மே மொத்த விலை 35 சில்லரை விலை 70 சரிவு 50 சதவீதம் கோயம்பேடு சந்தைக்கு மாம்பழம் வரத்து வழக்கமாக 70 டன் தற்போது 40 டன்
