அதானிக்கு எதிரான அமெரிக்க வழக்கு தள்ளுபடி செய்ய கோரும் மனு ஏற்பு
அதானிக்கு எதிரான அமெரிக்க வழக்கு தள்ளுபடி செய்ய கோரும் மனு ஏற்பு
ADDED : ஏப் 09, 2026 12:12 AM

நியூயார்க் : அதானி குழும தலைவர் கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி மீது, எஸ்.இ.சி., எனப்படும் அமெரிக்க பங்கு பரிமாற்ற ஆணையம் வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கை தள்ளுபடி செய்ய கோரி, அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நியூயார்க் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த வழக்கை நடத்த அமெரிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும், வழக்கை முகாந்திரம் அற்றதாக்கும் பல்வேறு காரணங்கள் உள்ளதாகவும் அதானி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்று, நீதிபதி இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.
இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களை பெற்றதாக, அதானி மீது கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் குற்றம் சாட்டப்பட்டது.
இதை திட்டவட்டமாக மறுத்துள்ள அதானி குழுமம், அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு இதில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என கூறியது.
இந்நிலையில், வழக்குக்கு எதிரான மனு தற்போது விசாரணைக்கு ஏற்கப்பட்டிருப்பது, அமெரிக்க நீதிமன்றத்தில் கிடைத்த முதல் வெற்றி என அதானி குழுமம் தரப்பில் கூறப்படுகிறது.
