அன்னிய முதலீட்டாளர்களை ஈர்க்க விதிகளை எளிதாக்க திட்டம்
அன்னிய முதலீட்டாளர்களை ஈர்க்க விதிகளை எளிதாக்க திட்டம்
ADDED : செப் 24, 2025 01:28 AM

மும்பை:புதிய அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான நடைமுறைகளை எளிதாக்க, ரிசர்வ் வங்கியும் பங்குச்சந்தை கண்காணிப்பு ஆணையமான செபியும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.
இந்திய சந்தைகளில் அன்னிய முதலீடுகள் அண்மைக்காலமாக குறைந்த அளவிலேயே வருவது புள்ளிவிபரங் களில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, வெளிநாடுகளைச் சேர்ந்த புதிய முதலீட்டாளர்களை ஈர்க்க, ரிசர்வ் வங்கியும் செபியும் திட்டமிட்டு வருகின்றன.
குறிப்பாக, வெளிநாட்டினர் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான நடைமுறைகளை எளிதாக்கும் வழிகள் குறித்து, இரு அமைப்புகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.
மேலும், மற்ற நாடுகளில் ஏற்கனவே ஆராயப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்ட சர்வதேச முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வந்தால், ஆவணப்பதிவுகளை குறைப்பது, சுருக்கமான ஆய்வு மட்டுமே மேற்கொள்வது என திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவில், அன்னிய முதலீட்டாளர் ஒருவர் புதிதாக பதிவு செய்வதற்கு 30 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை ஆகிறது. புதிய எளிதாக்கப்பட்ட நடைமுறையில், இந்த காலதாமதத்தை குறைத்து ஒப்புதல் அளிக்க பேசப்பட்டு வருகிறது.
கே.ஒய்.சி., உள்ளிட்ட ஆவண சோதனைகள் எளிதாக்கப்படும் என, செபி தலைவர் துஹின் காந்த பாண்டே கடந்த வாரம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.