சாலையோர வியாபாரிகளுக்கு 'பி.எம்., ஸ்வநிதி கிரெடிட் கார்டு' பிரதமர் மோடி அறிமுகம் செய்தார்
சாலையோர வியாபாரிகளுக்கு 'பி.எம்., ஸ்வநிதி கிரெடிட் கார்டு' பிரதமர் மோடி அறிமுகம் செய்தார்
ADDED : ஜன 24, 2026 02:47 AM

திருவனந்தபுரம்: சாலையோர வியாபாரிகளின் நலனுக்காக 'பி.எம்., ஸ்வநிதி' கிரெடிட் கார்டை பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரத்தில் வெளியிட்டார்.
ஒரு லட்சம் பயனாளிகளுக்கான கடனுதவிகளை வழங்கி, அவர் பேசியதாவது:
பிரதமரின் ஸ்வநிதி கிரெடிட் கார்டை அறிமுகம் செய்வதன் வாயிலாக, நாடு தழுவிய அளவில் ஏழைகளுக்கான நலத்திட்டம் துவங்குகிறது.
இதன் வாயிலாக, சாலையோர வியாபாரிகள், நடைபாதைகளில் தொழில் செய்வோர் பயனடைவர். இதுவரை சாலையோர வியாபாரிகள் தொழிலுக்காக சில நுாறு ரூபாய்களைக்கூட அதிக வட்டியில் கடனாக வாங்கி வந்தனர்.
இந்நிலையை இந்த கிரெடிட் கார்டு, மாற்றி அமைக்கும். முதன்முறையாக நாடெங்கும் லட்சக்கணக்கான சாலையோர வணிகர்கள் வங்கி கடன்களை பெற்று, வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி வருகின்றனர்.
பி .எம்., ஸ்வநிதி கிரெடிட் கார்டுகள் கேரளாவில் 10,000 பேருக்கு வழங்கப்படுகின்றன. இதில், 600 பேர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பயனாளிகள். முன்பெல்லாம் வசதி படைத்தவர்களுக்கே கிரெடிட் கார்டு கிடைக்கும். தற்போது, சாலையோர வர்த்தகர்களுக்கும் அது சாத்தியமாகியிருக்கிறது.
இவ்வாறு பிரதமர் கூறினார்.

