கோவையில் ஐ.டி., பார்க் தனியார் நிறுவனம் கட்டுகிறது
கோவையில் ஐ.டி., பார்க் தனியார் நிறுவனம் கட்டுகிறது
ADDED : டிச 23, 2025 01:10 AM

சென்னை: கோவையில், தனியார் நிறுவனம் ஒன்று, 9.70 லட்சம் சதுர அடி பரப்பளவில், தகவல் தொழில்நுட்ப பூங்காவை அமைக்க உள்ளது.
தமிழகத்தில் கோவை, மதுரை, திருச்சி போன்ற இரண்டாம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில்நுட்ப பூங்கா வளாகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது தனியார் நிறுவனங்களும் ஐ.டி., பூங்கா அமைப்பதில் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளன.
கோவையில் ஐ.டி., பூங்கா அமைக்க கே.பி.ஆர்., குழுமம் முன்வந்தது. இது தொடர்பாக தமிழக அரசுடன் இந்நிறுவனம் சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
இதன்படி, கோவை நீலாம்பூர் பகுதியில், 650 கோடி ரூபாய் முதலீட்டில், 9.70 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஐ.டி., பூங்கா அமைக்கப்பட உள்ளது.
இரண்டு அடித்தளம், தரை தளத்துடன், 12 மாடிகள் கொண்டதாக இந்த வளாகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால், 5,800 பேர் வேலைவாய்ப்பு பெறுவர் என்று கூறப்படுகிறது.

