ADDED : பிப் 21, 2024 12:41 AM

புதுடில்லி:அணுசக்தி துறையில், கிட்டத்தட்ட 2.15 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடு செய்வது குறித்து, மத்திய அரசு, தனியார் நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில், அணுசக்தி துறையின் பங்கு, இரண்டு சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. இருப்பினும் இதில் நிலக்கரி போல் கார்பன் உமிழ்வுகள் வெளியேறுவதில்லை.
இதையடுத்து அணுசக்தி முறையில், மின் உற்பத்தி மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்து, ரிலையன்ஸ், டாடா, அதானி, வேதாந்தா ஆகிய நிறுவனங்களுடன், அரசு முதலீட்டுக்கான பேச்சு நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதன்கீழ், தனியார் நிறுவனங்கள் அணுமின் நிலையத்திற்கு வெளியே உள்ள நிலம், நீர் மற்றும் கட்டுமானங்களை மேற்கொள்ளும் என்றும் அணுமின் நிலையங்கள் அமைத்தல், செயல்படுத்துதல் மற்றும் எரிபொருள் மேலாண்மை ஆகியவற்றுக்கான உரிமை, இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ்வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணுமின் நிலையத்தின் மின் விற்பனையில் இருந்து, தனியார் நிறுவனங்கள் வருவாய் பெற உள்ளதாகக் கூறப்படுகிறது.

