உபரி எத்தனால் பிரச்னையை தீர்க்க அரசுக்கு தயாரிப்பாளர்கள் கோரிக்கை
உபரி எத்தனால் பிரச்னையை தீர்க்க அரசுக்கு தயாரிப்பாளர்கள் கோரிக்கை
ADDED : டிச 27, 2025 01:14 AM

புதுடில்லி, ஏற்றுமதி அனுமதியால், உபரி எத்தனால் பிரச்னைக்கு தீர்வு ஏற்படாது என, தானிய எத்தனால் தயாரிப்பாளர்கள் சங்கமான ஜி.இ.எம்.ஏ., தெரிவித்துள்ளது.
டில்லியில் சங்கத்தின் தலைவர் சி.கே.ஜெயின் கூறியதாவது:
நாட்டின் எத்தனால் நுகர்வு, 1,200 கோடி லிட்டராக ஏற்ற இறக்கமின்றி, நின்று விட்டது. ஆனால், எத்தனால் உற்பத்தி துறை, 1,500 கோடி லிட்டருக்கு மேல் வினியோகிக்கும் திறன் பெற்றுள்ளது. இதனால், உபரி உற்பத்தியை என்ன செய்வது என்பதறியாது இத்துறை நிறுவனங்கள் தத்தளிக்கின்றன.
உலகிலேயே தானியங்கள் விலை அதிகமுள்ள நாடாக நம் நாடு இருப்பதால், எத்தனாலை ஏற்றுமதி செய்ய இயலாத நிலை உள்ளது. உற்பத்தி செலவில் 70 முதல் 72 சதவீதம் வரை விவசாயிகளுக்கு செல்கிறது. இதனால் எத்தனாலை, சர்வதேச போட்டியாளர்களை தாண்டி ஏற்றுமதி செய்வது சவாலாக உள்ளது.
மேலும், 2ஜி எனப்படும் இரண்டாம் தலைமுறை எத்தனால் ஏற்றுமதிக்கே அனுமதி உள்ள நிலையில், அதன் உற்பத்தி மிகக்குறைவு. தானிய அடிப்படையிலான 1ஜி எத்தனால் உற்பத்தி அதிகம்; ஆனால், சர்வதேச அளவில் அதன் விலையில் கடும் போட்டி நிலவுவதால், அதற்கும் வாய்ப்பு குறைவு.
கடந்த 2020 - 22ம் ஆண்டுகளில் அரசு அளித்த ஊக்கத்தால், எத்தனால் உற்பத்தி துறை விரைவான வளர்ச்சி கண்டது. அப்போது அரசு, எத்தனால், எத்தனால் என கூறிக்கொண்டிருந்தது.
எரிபொருளில் 20 சதவீதத்தை தாண்டியும் எத்தனாலை கலப்போம் என்றது அரசு. ஆனால், இப்போது அதை கூறுவதில்லை.
அதோடு, எத்தனால் கொள்கையிலும் அரசின் அறிவிப்புக்கும், கொள்முதலுக்கும் இடைவெளி உள்ளது. நிடி ஆயோக் உயிரி எரிபொருள் கொள்கையில் 2025ம் ஆண்டு வாக்கில், 1,500 கோடி லிட்டர் எத்தனால் கொள்முதல் செய்யலாம் எனக்கூறியது. ஆனால், உற்பத்தி 1,770 கோடி லிட்டராக உள்ள நிலையில், கொள்முதல் 1,050 கோடி லிட்டராக உள்ளது.
உணவு பாதுகாப்புக்காக இந்திய உணவு கழகத்தின் பாதுகாப்பை கோதுமை, அரிசி ஆகியவை பெற்றுள்ளன. குறைவான உணவு பயன்பாடுள்ள சோளம், இரண்டு சதவீதம் மட்டுமே உணவாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால், எத்தனால் உற்பத்திக்கு அளிக்கப்பட்ட ஊக்கத்தால், உணவு பயிராக இருந்த சோளம், தொழிற்சாலை பயிராக மாறி விட்டது.
விவசாயிகளின் வருமானத்தில் நேரடி தொடர்பு கொண்டுள்ளதாக சோளம் மாறியுள்ள சூழலில், எரிபொருளில் 20 சதவீத எத்தனால் கலப்பு இலக்கை அடைந்ததில் முக்கிய பங்கு வகித்தது. ஆனால், தற்போது இந்த அளவை அதிகரிப்பது குறித்த அரசின் கொள்கையில் தெளிவில்லாததால், உபரி உற்பத்தி காரணமாக எத்தனால் துறை சவால்களை சந்தித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
எத்தனால் உற்பத்தி செலவில் 70 முதல் 72 சதவீதம் வரை விவசாயிகளுக்கு செல்கிறது. இதனால், சர்வதேச போட்டியாளர்களை தாண்டி ஏற்றுமதி செய்வது சவாலாக உள்ளது.

