சென்னையில் 'குவால்காம்' மொபைல் சிப் மையம் துவக்கம்
சென்னையில் 'குவால்காம்' மொபைல் சிப் மையம் துவக்கம்
ADDED : மார் 15, 2024 01:56 AM

சென்னை:''குவால்காமின் புதிய வடிவமைப்பு மையம், எலக்ட்ரானிக்ஸ் துறைக்கு அடித்தளமாக இருக்கும்; பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 'செமிகண்டக்டர்' துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது,'' என, மத்திய ரயில்வே, எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
'குவால்காம்' நிறுவனம், சென்னை, தரமணி, ராமானுஜன் தகவல் தொழில்நுட்ப நகரத்தில், 177 கோடி ரூபாய் முதலீட்டில், குவால்காம் சென்னை மொபைல் சிப் மையத்தை அமைத்துள்ளது.
வேலைவாய்ப்பு
அங்கு, 'ஒயர்லெஸ்' தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இந்த மையத்தால், 1,600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
குவால்காம் மொபைல் சிப் மையத்தை, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று துவக்கி வைத்தார். விழாவில், குவால்காம் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான கிறிஸ்டினோ அமோன், மைய தலைமை அதிகாரி மகேஷ் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், ஐ.ஐ.டி., உட்பட, 17 கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, 8.50 கோடி ரூபாயில், '6ஜி' தொழில்நுட்பம் தொடர்பாக ஆய்வு செய்யப்பட உள்ளதாக, குவால்காம் அறிவித்துள்ளது.
கிறிஸ்டினோ அமோன் பேசும்போது, ''சென்னையில் துவக்கியுள்ள மொபைல் சிப் மையம், குவால்காமின் உலகளாவிய ஆய்வுக்கு முக்கிய பங்கு வகிக்கும். மத்திய, மாநில அரசுகள், தொழில் துவங்க தேவையான நல்ல சூழலை ஏற்படுத்தி தருகின்றன'' என்றார்.
அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:
இந்தியாவின் தொழில்நுட்ப வலிமை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
நம் நாடு, புதுமைகளின் உலகலாவிய தலைமையாக திகழ்வதுடன், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் முன்னேற்றத்தை அடைவதில் வலுவான அர்ப்பணிப்பை கொண்டு உள்ளது.
குவால்காம், இந்தியாவின் டிஜிட்டல் பயணத்தை விரைவுபடுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. அந்நிறுவனத்திற்கு, ஆதரவு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
புதிய மொபைல் சிப் மையம், எலக்ட்ரானிக்ஸ் உற்பத்திக்கு அடித்தளமாக இருக்கும். பிரதமர் நரேந்திர மோடி, 'செமி கண்டக்டர்' எனப்படும் மின்னணு சாதனங்களுக்காக, 'சிப்' தயாரிக்கும் மூன்று ஆலைகளுக்கு, நேற்று முன்தினம் அடிக்கல் நாட்டினார்.
அதற்கான கருத்துரு, பிப்., 29ம் தேதி வந்தன.
மூன்று மாதங்களுக்குள் அடிக்கல் நாட்ட திட்டமிடப்பட்டது. ஆனால், இரு நாட்களில் அனுமதி வழங்கப்பட்டு, 15 நாட்களில், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.
அந்தளவுக்கு, மோடி தலைமையிலான மத்திய அரசு செமிகண்டக்டர் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.
ஒப்பந்தம்
இந்தியாவில், '5ஜி' தொழில்நுட்பத்திற்கு, 100; ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு, 100 ஆய்வகங்களும் உள்ளன.
இந்த ஆய்வில் மாணவர்களும் பயன்பெற, 104 பல்கலைகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

