ADDED : ஜன 19, 2024 11:01 PM

மும்பை:மும்பை பங்குச் சந்தையில், நேற்று ரயில்வே துறை சார்ந்த நிறுவன பங்குகளின் விலை 15 சதவீதம் வரை அதிகரித்தன. அதிகபட்சமாக ஆர்.வி.என்.எல்., என்னும் 'ரயில் விகாஸ் நிகாம்' நிறுவனத்தின் பங்குகள், 20 சதவீதம் அதிகரித்து, 292.30 ரூபாயாக உயர்ந்தது.
மத்திய அரசு நாட்டின் உள்கட்டமைப்பு உருவாக்கத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் நிலையில், அடுத்த மாதம் 1ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள இடைக்கால பட்ஜெட்டில், ரயில்வே துறைக்கு சாதகமான அறிவிப்புகள் வரக்கூடும் என்று முதலீட்டாளர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
இந்த நம்பிக்கையின் காரணமாகவே, பங்குகளின் விலையும் உயர்ந்துள்ளதாக, பங்குச்சந்தை ஆயாவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆர்.வி.என்.எல்., நிறுவனம் ரயில்வே அமைச்சகத்தின் சார்பாகவும், தனியாகவும் திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனமாகும்.
இது, இந்தியாவில் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், போட்டி ஏலம் வாயிலாக 32,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்களை பெற்றுள்ளது.
மேலும், மாலத்தீவு போன்ற வெளிநாடுகளிலும் இந்நிறுவனம் அதன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கிர்கிஸ்தான் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டு உள்ளது.
நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு இறுதியில், நிறுவனம் 67,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்களைக் கொண்டிருந்தது.