விலை சரிவால் ரேயான் உற்பத்தி நிறுத்தம் தினமும் 50 கோடி ரூபாய் இழப்பு
விலை சரிவால் ரேயான் உற்பத்தி நிறுத்தம் தினமும் 50 கோடி ரூபாய் இழப்பு
ADDED : அக் 18, 2025 01:57 AM

பல்லடம்: ரேயான் துணி விலை வீழ்ச்சி காரணமாக, திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில், நேற்று முதல் ரேயான் துணி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தினமும் 40 - 50 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில், 30,000க்கும் மேற்பட்ட சுல்ஜர், ஏர்ஜெட் வகை நவீன தறிகள் வாயிலாக, தினமும் ஒரு கோடி மீட்டர் ரேயான் துணிகள் உற்பத்தியாகின்றன. இவற்றில் பெரும்பாலானவை வடமாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்கின்றன; வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.
ரேயான் துணி விலை திடீர் வீழ்ச்சியை சந்தித்ததால், பல்லடத்தை தலைமையிடமாக கொண்ட தமிழ்நாடு ஜவுளி தொழில்முனைவோர் கூட்டமைப்பு சார்பில், ரேயான் துணி உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நேற்று துவங்கியது.
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் கூறியதாவது:
அதிக வரி விதிப்பு காரணமாக, அமெரிக்காவுக்கான ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாடுகளை விட இந்தியாவில், 10 - 12 சதவீதம் வரை பஞ்சு விலை அதிகம் என்பதுடன், துணி விலையும் அதிகம் என்பதால், பிற நாடுகளுடன் போட்டி போட முடிவதில்லை. அமெரிக்க வரிவிதிப்பு, தேவைக்கு அதிகமான உற்பத்தி, துணி நுகர்வு குறைந்தது உள்ளிட்ட பல காரணங்களால், துணி விலை, மீட்டருக்கு, 3 ரூபாய் வரை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உற்பத்தியை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
உற்பத்தி நிறுத்தத்தால், தினசரி, 40 - 50 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தினசரி 11 லட்சம் கிலோ நுால் கொள்முதல் செய்வதும் நிறுத்தப்பட்டுள்ளது. 15 நாள் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் முடிவடைந்தவுடன், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து அறிவிக்கப்படும்.
ஜவுளி தொழிலை பாதுகாக்க, வெளிநாடுகளுக்கு இணையாக, மூலப் பொருட்களின் விலை குறைவாக கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இறக்குமதியை தவிர்த்து, உள்நாட்டு உற்பத்திக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். பிற நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டு, தேவையான சலுகைகளை அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரேயான் துணி விலை திடீர் வீழ்ச்சியை சந்தித்ததால், பல்லடத்தை தலைமையிடமாக கொண்ட தமிழ்நாடு ஜவுளி தொழில்முனைவோர் கூட்டமைப்பு சார்பில், ரேயான் துணி உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நேற்று துவங்கியது