உயர் பாதுகாப்பு தரவு மையம் ஒடிஷாவில் அமைத்த ஆர்.பி.ஐ.,
உயர் பாதுகாப்பு தரவு மையம் ஒடிஷாவில் அமைத்த ஆர்.பி.ஐ.,
ADDED : பிப் 23, 2026 01:22 AM

புதுடில்லி: எதிரி நாடுகளின் தாக்குதல், நிலநடுக்கம் போன்ற அபாயத்தில் இருந்து, வங்கி தரவுகளை பாதுகாப்பதற்காக, இரண்டாவது உயர் பாதுகாப்பு தரவு மையத்தை ஒடிஷாவில் ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.
இது குறித்து ஆய்வாளர்கள் தெரிவித்ததாவது:
கடந்த 2023ல் ஒடிஷாவின் புவனேஸ்வரில் 18.55 ஏக்கர் பரப்பளவில் உயர் பாதுகாப்பு தரவு மையத்தை அமைக்கும் பணியை துவங்கிய போது, மையத்தின் அமைவிடம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், போக்குவரத்து, இயக்கம் ஆகியவற்றை தாண்டி, பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. புதிய தரவு மையம் அமைந்துள்ள இடம், நம் நாட்டின் மேற்கு மற்றும் தெற்கு எல்லைகளுக்கு மிக தொலைவில் அமைந்துள்ளது.
எனவே, எதிரி நாடுகளின் ஏவுகணை, டிரோன் தாக்குதல்களில் இருந்து தரவு மையத்துக்கு பாதுகாப்பு கிடைக்கும். நிலநடுக்க அபாய மண்டலங்களுக்கு வெளியே அந்த தரவு மையம் அமைந்துள்ளதால், நிலநடுக்கத்தால் மையத்தின் தரவுகள் அழிந்து போவது தவிர்க்கப்படும். இது தவிர, இணையவழி தாக்குதல் அபாயம் மற்றும் நெட்வொர்க் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

