ADDED : ஜூலை 18, 2025 11:55 PM

புதுடில்லி:கெல்வினேட்டர் நிறுவனத்தின் இந்திய வணிகத்தை, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம், கிட்டத்தட்ட 160 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் துவங்கப்பட்ட கெல்வினேட்டர் நிறுவனம், பின்னர் பல கைகள் மாறி, தற்போது ஸ்வீடனின் எலக்ட்ரோலக்ஸ் குழுமத்தின் கீழ் இயங்கி வருகிறது. வீட்டுச் சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான கெல்வினேட்டர், 'ஏசி' வாஷிங் மெஷின், ஏர் கூலர், ரெப்ரிஜிரேட்டர் உள்ளிட்ட சாதனங்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
நேரடி விற்பனையகங்கள் வாயிலாக இல்லாமல், பிற நிறுவனங்களின் சில்லரை கடைகள் வாயிலாகவே விற்பனை செய்கிறது. ரிலையன்ஸ் ரீடெய்ல், ஏற்கனவே உரிமம் பெற்று இந்நிறுவனத்தின் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், கெல்வினேட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளதாக ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
இதற்கான விலை குறித்து, ரிலையன்ஸ் ரீடெய்ல் எதுவும் தெரிவிக்காத நிலையில், 160 கோடி ரூபாய்க்கு கெல்வினேட்டரின் இந்திய வணிகத்தை விற்பனை செய்துள்ளதாக, எலக்ட்ரோலக்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது.
வரும் 2028 -29ல், இந்திய நுகர்வோர் பொருட்கள் சந்தை மதிப்பு 3 லட்சம் கோடி ரூபாயை எட்டும்
-எர்ன்ஸ்ட் அண்டு யங் ஆய்வில் கணிப்பு