நாட்டின் ஏற்றுமதியாளர்களுக்கு ரிசர்வ் வங்கி சலுகை மழை இருபது துறையினருக்கு பொருந்தும்
நாட்டின் ஏற்றுமதியாளர்களுக்கு ரிசர்வ் வங்கி சலுகை மழை இருபது துறையினருக்கு பொருந்தும்
ADDED : நவ 16, 2025 01:33 AM

புதுடில்லி:ஏற்றுமதியாளர்களின் சிரமங்களை குறைக்கும் வகையில், ரிசர்வ் வங்கி அதிக சலுகைகளை அறிவித்திருக்கிறது.
அமெரிக்காவின் கடுமையான வரிவிதிப்பு உள்ளிட்ட சவால்களால் குறிப்பிட்ட துறைகளை சார்ந்தோருக்கு கடனை திரும்ப செலுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. அவர்களுக்காக கடன் சுமையை குறைப்பது, திருப்பி செலுத்தும் காலத்தை நீட்டிப்பது, ஏற்றுமதிக்கான முழு பணத்தையும் பெறுவதற்கான காலக்கெடுவை நீட்டிப்பது போன்ற சலுகைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி, பாதிக்கப்பட்டுள்ள 20 துறைகளை சேர்ந்த ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, இந்நிறுவனங்களுக்கான டெர்ம் லோன் கடன் தவணை, நடைமுறை மூலதன கடன்களுக்கான வட்டி செலுத்துவதில் சிறிது காலம் விலக்களிப்பது, தள்ளிப்போடுவது ஆகிய சலுகைகளை வங்கிகள் வழங்கும்.
ஆனால், இவ்வாண்டு செப்டம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை பெறப்படும் கடன் தவணைக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும். வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கியல்லாத நிதி சேவை நிறுவனங்கள், அகில இந்திய அளவிலான நிதி நிறுவனங்களுக்கு இந்த வழிகாட்டுதல் பொருந்தும்.
ஏற்றுமதி சலுகைகள் ஏற்றுமதிக்கு முந்தைய மற்றும் ஏற்றுமதிக்கு பிந்தைய கடன்களுக்கான காலம், தற்போதுள்ள 270 நாட்களில் இருந்து 450 நாட்களாக உயர்வு. அடுத்த ஆண்டு மார்ச் 31 வரையிலான கடன்களுக்கு இச்சலுகை பொருந்தும்.
இவ்வாண்டு ஆகஸ்ட் 31 அன்றோ, அதற்கு முன்போ பேக்கிங் கிரெடிட் வசதியை பெற்றவர்களால் ஒருவேளை ஏற்றுமதி செய்ய முடியாமல் போனால், உள்ளூர் சந்தையில் சரக்கை விற்பனை செய்யவோ, அல்லது வேறு புதிய ஏற்றுமதி ஆர்டருக்குப் பயன்படுத்தவோ வங்கிகள் அனுமதிக்கும்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பொருட்கள்,சேவைகளுக்கான பணத்தைப் பெறுவதற்கான காலம் 9 மாதத்திலிருந்து 15 மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதிக்கான முன்பணம் பெற்ற நாள் அல்லது ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட நாளிலிருந்து 1 ஆண்டுக்குள் சரக்கை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற விதி தளர்த்தப்படுகிறது. இனி 3 ஆண்டுகளுக்குள் ஏற்றுமதி செய்யலாம்.
ஜவுளி துறை நிம்மதி
இதுகுறித்து ஆயத்த ஆடைஏற்றுமதி மேம்பாட்டு
கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) துணை தலைவர் சக்திவேல் கூறுகையில்,
''ஏற்றுமதியாளர்கள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு, ரிசர்வ் வங்கி,
அவசரகால நிவாரணம் வழங்கியுள்ளது. நடைமுறை சவால்களை இதன் மூலம் சமாளிக்க
முடியும். அமெரிக்க வரி உயர்வால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்களுக்கு,
ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஆறுதலாகவும், நிம்மதியாகவும் அமைந்துள்ளது,''
என்றார்.

