'மலிவு விலை செம்பு இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்'
'மலிவு விலை செம்பு இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்'
ADDED : டிச 15, 2025 03:24 AM

புதுடில்லி: தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை பயன்படுத்தி, மலிவு விலையில், செம்பு இறக்குமதி செய்யப்படுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு, இந்திய செம்பு உற்பத்தியாளர் சங்கம் எனும் ஐ.பி.சி.பி.ஏ., வலியுறுத்தி உள்ளது.
மேலும் அச்சங்கம் தெரிவித்துள்ளதாவது:
தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நாடுகளிலிருந்து அதிக அளவில் செம்பு இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டில் செம்பு உருக்குதல் மற்றும் மறு சுழற்சித் தொழில்கள் கடுமையாக பாதிக்கப் படுகின்றன.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள நாடுகளாக இருந்தாலும், செம்பு கேத்தோடு, கம்பி, ஒயர், டியூப் ஆகிய பொருட்களுக்கு 3 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட வேண்டும். மேலும், வெளிநாட்டில் இருந்து செம்பு இறக்குமதி செய்யப்படுவதற்கு உச்ச வரம்பை அரசு நிர்ணயிக்க வேண்டும்.
இதுதவிர, ஆசியான் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின்படி சீன செம்பு கேத்தோடு, தாய்லாந்து, மலேஷியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் சற்றே மாற்றம் செய்யப்பட்டு, இங்கே இறக்குமதிக்கு அனுமதிக்கப்படுகிறது. இதனால், செம்பு ஒயர் இறக்குமதி 66 சதவீதமும், செம்பு டியூப் இறக்குமதி 103 சதவீதமும் அதிகரித்திருக்கிறது.
இந்தோனேஷியாவின் செம்பு உருக்குத் தொழிலின் விரிவாக்கம், ஆசிய செம்புத் துறைகளில் குவியும் சீன முதலீடு ஆகியவையும் போட்டியைக் கடுமையாக்கிவிட்டன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

