சில்லரை விலை பணவீக்கம் பிப்ரவரியில் 3.21 சதவிகிதம் ஆனது
சில்லரை விலை பணவீக்கம் பிப்ரவரியில் 3.21 சதவிகிதம் ஆனது
UPDATED : மார் 13, 2026 01:28 AM
ADDED : மார் 13, 2026 01:25 AM

புதுடில்லி: கடந்த பிப்ரவரி மாதத்தில், நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 3.21 சதவீதமாக அதிகரித்துள்ளதாக, மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய ஜனவரி மாதத்தில் 2.74 சதவீதமாக இருந்தது.
மக்களின் நுகர்வு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பிரதிபலிக்கும் விதமாக, கடந்த மாதம் முதல் புதிய கணக்கீட்டு முறையில் பணவீக்க தரவுகள் வெளியிடப்படுகின்றன. இதனால், நடப்பாண்டு பிப்ரவரி மாத பணவீக்கத்தை, கடந்தாண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுவது சரியானதாக இருக்காது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் வரை, 2012ம் ஆண்டை அடிப்படையாக கொண்டு பணவீக்க தரவுகள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், நடப்பாண்டு ஜனவரி முதல் 2024ம் ஆண்டை அடிப்படையாக கொண்டு வெளியிடப்படுகின்றன.
உணவு, பானங்கள், ஆடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களின் விலை உயர்வே கடந்த மாதம் பணவீக்கம் உயர முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. குறிப்பாக, உணவுப்பொருள் பிரிவு பணவீக்கம் கடந்த ஜனவரியில், 2.13 சதவீதமாக இருந்த நிலையில், பிப்ரவரியில் 3.47 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த மாத இறுதியில் தான் மேற்காசியாவில் போர் துவங்கியது என்பதால், அதன் தாக்கம் இதில் தெரியவராது.
நாட்டின் நகர்ப்புறங்களில் விலைவாசி உயர்வு 3.48 சதவீதம்; கிராமப்புறங்களில் 3.46 சதவீதம் பதிவு
தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த மாதம் சில்லரை விலை பணவீக்கம் 3.43 சதவீதம்
நடப்பு ஜன., - மார்ச் காலாண்டில் சராசரி சில்லரை பணவீக்கம் 2.10 சதவீதமாக இருக்கும் என கணிப்பு.

