ADDED : டிச 13, 2025 01:11 AM

புதுடில்லி: நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த நவம்பர் மாதத்தில் 0.71 சதவீதமாக சற்றே அதிகரித்துள்ளதாக, மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ரிசர்வ் வங்கி பராமரிக்க வேண்டிய பணவீக்க வரம்பான நான்கு சதவீதத்துக்குள் இது பதிவாகியுள்ளது.
நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையிலான சில்லரை விலை பணவீக்கம், முந்தைய அக்டோபர் மாதத்தில் வரலாறு காணாத அளவுக்கு 0.25 சதவீதமாக குறைந்திருந்தது. கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து குறைந்து வந்த பணவீக்கம், நவம்பரில் சிறிய உயர்வை கண்டுள்ளது.
கடந்த மாதம், கிராமப்புறங்களில் பணவீக்கம் 0.10 சதவீதமாகவும்; நகர்ப்புறங்களில் 1.40 சதவீதமாகவும் இருந்தது. காய்கறி, முட்டை, இறைச்சி மற்றும் எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலை உயர்வே பணவீக்கம் அதிகரிக்க முக்கிய காரணமானது.
உணவுப் பொருட்கள் பிரிவில் தொடர்ந்து பணவாட்டமே காணப்படுகிறது. எனினும், அக்டோபரில் 5.02 சதவீதமாக இருந்த பணவாட்டம், கடந்த மாதம் 3.91 சதவீதமாக குறைந்துள்ளது.
பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை தொடர்ந்து குறைவதே பணவாட்டம் எனப்படுகிறது. எரிபொருள் பிரிவு பணவீக்கம் அக்டோபரில் 1.98 சதவீதமாக இருந்த நிலையில், நவம்பரில் 2.32 சதவீதமாக அதிகரித்துள்ளது.

