உணவு பதப்படுத்தும் சிறுதொழிலுக்கு ரூ.120 கோடி மானியம் விடுவிப்பு
உணவு பதப்படுத்தும் சிறுதொழிலுக்கு ரூ.120 கோடி மானியம் விடுவிப்பு
ADDED : டிச 14, 2025 01:03 AM

சென்னை : தமிழகத்தில் பிரதமரின் உணவு பதப்படுத்தும் திட்டத்தில் குறுந்தொழில்களை துவக்கிய நிறுவனங்களுக்கு வழங்க, சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு, மத்திய - மாநில அரசுகள் 120 கோடி ரூபாய் மானியம் விடுவித்துள்ளன.
நாட்டில் உள்ள குறுந்தொழில் நிறுவனங்கள் தரமான உணவு பொருட்கள் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க, பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தை, மத்திய அரசு கடந்த 2020 - 21 முதல் செயல்படுத்தி வருகிறது.
இதை தமிழகத்தில், தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் தொழில் வணிக ஆணையரகம் செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் தனிநபர், மகளிர் குழு தொழில் துவங்க வங்கிகளில் கடனுதவி வழங்கப்படுகிறது. தொழிலுக்கான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம், அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.
மேலும், சுய உதவி குழுக்களுக்கு சிறிய மூலப்பொருட்கள் வாங்க, 40,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. பிரதமரின் உணவு பதப்படுத்தும் திட்டத்தில் தமிழகத்தில் இதுவரை, 16,200 குறுந்தொழில் நிறுவனங்களுக்கு, 900 கோடி ரூபாய்க்கு கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
பயனாளிகளுக்கு வழங்கப்படும் மொத்த மானிய தொகையில் 60 சதவீதம் மத்திய அரசும், 40 சதவீதம் தமிழக அரசும் வழங்குகின்றன.
இந்தாண்டில், 250 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளது. அதில், ஏற்கனவே 2,500 நிறுவனங்களுக்கு வழங்க, 100 கோடி ரூபாய் மானியம் விடுவிக்கப்பட்டது.
தற்போது, மத்திய அரசு 75 கோடி ரூபாய், தமிழக அரசு 45 கோடி ரூபாய் என, மொத்தம் 120 கோடி ரூபாய் மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்டுள்ள 120 கோடி ரூபாய் மானியம், 2,500 நிறுவனங்கள், 15,000 சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும்
தமிழகத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு 550 கோடி ரூபாய் மானியம் அறிவித்த மத்திய அரசு, இதுவரை 420 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.

