நிலக்கரி வாயுவாக்க திட்டத்திற்கு ரூ.37,500 கோடி ஊக்கத்தொகை
நிலக்கரி வாயுவாக்க திட்டத்திற்கு ரூ.37,500 கோடி ஊக்கத்தொகை
ADDED : மே 14, 2026 02:49 AM

புதுடில்லி: துாய்மையான எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கவும், எரிபொருள் இறக்குமதி சார்பை குறைக்கவும், 'நிலக்கரி வாயுவாக்க' திட்டங்களுக்கு 37,500 கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்கத்தொகை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
வரும் 2030ம் ஆண்டிற்குள் 10 கோடி டன் நிலக்கரியை வாயுவாக்கும் தேசிய இலக்கை அடைய இத்திட்டம் உதவும் என்றும், இதன் வாயிலாக எல்.என்.ஜி., யூரியா, அம்மோனியா, மெத்தனால் போன்றவற்றின் இறக்குமதி கணிசமாக குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், புதிய ஆலை மற்றும் இயந்திரங்களுக்கான செலவில் 20 சதவீதம் வரை நிதி ஊக்கத்தொகையாக வழங்கப்படும். போட்டி ஏல முறையில் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, 4 தவணைகளாக இந்த தொகை விடுவிக்கப்படும்.
இதற்கான ஊக்கத்தொகை வரம்பாக, ஒரு திட்டத்திற்கு அதிகபட்சமாக 5,000 கோடி ரூபாயும், ஒரு நிறுவனத்திற்கு ஒட்டுமொத்தமாக 12,000 கோடி ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
“இந்த ஊக்கத்தொகை திட்டத்தின் வாயிலாக, கிட்டத்தட்ட 2.50 லட்சம் கோடி ரூபாய் முதல் 3 லட்சம் கோடி ரூபாய் வரை புதிய முதலீடுகள் ஈர்க்கப்படும். அதே நேரத்தில், நிலக்கரி வளமுள்ள பகுதிகளில் 25 திட்டங்கள் வாயிலாக 50,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்,” என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
