தோல் கழிவில் இருந்து கிடைக்கும் உப்பு மறுசுழற்சிக்கு ரூ.50 கோடியில் ஆலை
தோல் கழிவில் இருந்து கிடைக்கும் உப்பு மறுசுழற்சிக்கு ரூ.50 கோடியில் ஆலை
ADDED : அக் 05, 2025 12:38 AM

சென்னை:தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரில் இருந்து கிடைக்கும் உப்பை, மறுசுழற்சிக்கு பயன்படுத்தும் மூலப்பொருளாக தயாரிக்கும் ஆலை, ராணிப்பேட்டையில் அமையவுள்ளது.
நம் நாட்டில் ஆடு, மாடு தோலை பதப்படுத்தி, அதில் இருந்து காலணி, பை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. தோலை வெட்டி எடுத்ததும், கெட்டுப் போகாமல் இருக்க பதப்படுத்தப்படுகிறது. இதற்கு உப்பு, ஐஸ் பயன்படுத்தப்படுகின்றன.
உப்பு விலை குறைவு என்பதால் பெரும்பாலானோர், தோலை பதப்படுத்த உப்பையே பயன்படுத்துகின்றனர். இதனால், சராசரியாக, 100 கிலோ பதப்படுத்தப்பட்ட தோலில் இருந்து, 30 கிலோ உப்பு கிடைக்கிறது.
ஆலை கழிவுநீரை சுத்திகரிக்க, தமிழகத்தில் தோல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இடங்களில், 10 பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றில், கழிவுநீரில் இருந்து உப்பு தனியே பிரிக்கப்படுகிறது. பின், தண்ணீர் நன்னீராக மாற்றப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு, தோல் கழிவில் இருந்து சேகரிக்கப்பட்ட, 50,000 டன் அளவுக்கு உப்பு கையிருப்பில் உள்ளது.
எனவே, தோல் தொழிற்சாலை உப்பை, தொழிற்சாலைகளில் மறுசுழற்சிக்கு பயன்படுத்தும் உப்பாக மாற்றும் தொழில்நுட்பத்தை, சி.எல்.ஆர்.ஐ., எனப்படும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனமும், குஜராத்தில் உள்ள மத்திய உப்பு மற்றும் கடல் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளன.
இந்த தொழில்நுட்பத்தை செயலாக்கத்திற்கு கொண்டு வரும் ஆலையை, ராணிப்பேட்டையில், 50 கோடி ரூபாயில் மத்திய - மாநில அரசுகள் இணைந்து அமைக்க உள்ளன. இந்த ஆலையில், கழிவு உப்பில் இருந்து, பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட உள்ளன.
தோல் தொழிற்சாலை கழிவுநீரில் கிடைக்கும் உப்பை அப்புறப்படுத்த கடலில், 100 கி.மீ., சென்று கொட்ட வேண்டும் அல்லது நிலத்தில் புதைக்க வேண்டும்.
கடலில் கொட்ட அதிக செலவாகும் என்ற நிலையில், நிலத்தில் உப்பை புதைத்தால் அந்த இடத்தில் பயிர் சாகுபடி செய்ய முடியாது.