ADDED : ஏப் 05, 2026 03:24 AM

புதுடில்லி:கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் கடல் உணவு ஏற்றுமதி இரண்டு மடங்கு வளர்ச்சி கண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
மீன் உற்பத்தி மற்றும் அது சார்ந்த வர்த்தகம் நாடு முழுதும் 3 கோடி பேருக்கு வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. கடல் உணவு உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 2024-25ல் 200 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக உலகின் இரண்டாவது மீன் உற்பத்தி நாடாக நம் நாடு இருந்து வருகிறது. உலக அளவில் மீன் உற்பத்தியில் 8 சதவீதம் பங்களித்து வருகிறது.
நாட்டின் கடல் உணவு ஏற்றுமதியில் இரண்டு மடங்கு வளர்ச்சியை அடைந்திருக்கிறது. அதாவது, கடந்த 2024-25ல் 62,000 கோடி ரூபாயை எட்டியுள்ளது. 350 வகையிலான கடல் உணவுகள் 130 நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. கடல் உணவுகளில் இறால் ஏற்றுமதி முன்னணியில் உள்ளது.
இவ்வாறு தெரிவித்து உள்ளன.
'பிரதம மந்திரி மத்ஷ்யா சம்படா யோஜனா'வின் கீழ் மீன் உற்பத்தியை விரிவுபடுத்துதல், தரமான மீன் குஞ்சுகள் உற்பத்தி, குளிரூட்டப்பட்ட விநியோக சங்கிலி, ஏற்றுமதியை ஊக்குவித்தல் என செயல்பாடுகள் தொடர்கின்றன.
