பட்டுக்கோட்டை ராஜாமடத்தில் கடல் உணவு நிறுவன தொழில் பூங்கா
பட்டுக்கோட்டை ராஜாமடத்தில் கடல் உணவு நிறுவன தொழில் பூங்கா
ADDED : அக் 16, 2025 03:00 AM

சென்னை: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை ராஜாமடத்தில், கடல் உணவு பொருட்கள் பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்காக புதிய தொழில் பூங்காவை, 'சிப்காட்' நிறுவனம் அமைக்க உள்ளது.
தமிழகத்தில் இருந்து கடல் உணவு பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா ராஜாமடத்தில், கடல் உணவு பொருட்கள் பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி தொழில் பூங்காவை, 'சிப்காட்' அமைக்க உள்ளது.
அங்கு, தரப்பரிசோதனை ஆய்வகங்கள், குளிர்சாதன வசதியுடன் சேமிப்பு கிடங்குகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதனால், அங்கு தொழில் துவங்கும் நிறுவனங்கள் மீன், இறால் உள்ளிட்ட கடல் உணவு பொருட்களை பதப்படுத்தி, ஏற்றுமதி செய்ய முடியும்.
இந்த தொழில் பூங்கா வாயிலாக, 200 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கவும், 2,000 வேலைவாய்ப்பை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில், 7,000 கோடி ரூபாயாக உள்ள கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதியை, 43,000 கோடி ரூபாயாக அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த தொழிலை ஊக்குவிக்க தனி கொள்கை வெளியிடப்படும்.
ராஜாமடத்தில், 113 ஏக்கரில் கடல் உணவு பொருட்கள் பூங்கா அமைக்க, 'சர்வே' பணி முடிவடைந்துள்ளது. அந்த நிலம், அரசிடம் கேட்கப்பட்டு உள்ளது. நிலம் கிடைத்ததும் தொழில் பூங்கா அமைக்கும் பணிகள் துவங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே ராஜாமடத்தில் கடல் உணவு தொழில் பூங்கா அமைக்க 113 ஏக்கர் நிலம், தமிழக நில நிர்வாக ஆணையரகத்திடம் கேட்கப்பட்டு உள்ளது தமிழகத்தின் மொத்த கடற்கரை நீளம் திருவள்ளூர் - கன்னியாகுமரி வரை, 1,076 கி.மீ., 14 கடலோர மாவட்டங்களில், 10.50 லட்சம் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.