'சொத்து விபரங்களை வெளியிட செபி உயர் அதிகாரிகள் தயக்கம்'
'சொத்து விபரங்களை வெளியிட செபி உயர் அதிகாரிகள் தயக்கம்'
ADDED : டிச 14, 2025 01:11 AM

மும்பை: 'செபி' உயர் அதிகாரிகள் தங்கள் சொத்து விபரங்களை பொதுவெளியில் சமர்ப்பிக்க தயங்குவதாக, அதன் தலைவர் துஹின் காந்த பாண்டே தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் தெரிவித்து உள்ளதாவது:
செபி அமைப்பில் தலைமை பொது மேலாளர் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவியில் இருப்போர் சொத்து விபரங்களை வெளியிட கேட்டுக் கொள்ளப்பட்டது. தனிநபர் சுதந்திரம், பாதுகாப்பு ஆகிய விஷயங்களை கருத்தில் கொண்டு, பொதுவெளியில் அறிவிக்க அவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
மேலும், சொத்து விபரங்களை செபியில் உள்ளே அமைக்கப்படும் தனிப்பிரிவிடம் சமர்ப்பிக்க தயாராக உள்ளனர்; அது குறித்து கவலை எதுவும் இல்லை என கூறுகின்றனர்.
இது தொடர்பான இறுதி முடிவு, அடுத்த வாரிய கூட்டத்தில் எடுக்கப்படும்.
தற்போது மாற்று முதலீட்டு பண்டுகள், மியூச்சுவல் பண்டு, போர்ட்போலியோ மேனேஜ்மென்ட் என ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி விதிகள் உள்ளன. இவற்றை மாற்றி, அனைத்து நிதி மேலாளர்களுக்கும், ஒரே பொதுவான விதியை கொண்டு வர செபி திட்டமிட்டுள்ளது.
இதனால், மூன்று உரிமங்கள் பெற வேண்டிய தேவை குறைவதால், பொதுவான விதிகளை பின்பற்றுவதால் செலவு குறைவதோடு, நேரமும் மிச்சமாகும். பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கான விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன. இவை மிகப்பெரிய பணி என்பதால், நடைமுறைப்படுத்த சிறிது காலம் எடுக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

