ADDED : மார் 05, 2026 01:06 AM

புதுடில்லி: நாட்டின் சேவை துறை நிறுவனங்களின் வளர்ச்சி, கடந்த பிப்., மாதத்தில் சற்று குறைந்துள்ளதாக எச்.எஸ்.பி.சி., வங்கி வெளியிட்டுள்ள பி.எம்.ஐ., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஆர்டர்கள் குறைந்தது மற்றும் பணவீக்கம் அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணமாகும்.
எனினும், தயாரிப்பு மற்றும் சேவை துறைகளை உள்ளடக்கிய கூட்டு பி.எம்.ஐ., குறியீடு, கடந்த பிப்ரவரியில் 58.90 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஜன., மாதத்தில் 58.40 புள்ளிகளாக இருந்தது.
இதுகுறித்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சேவை துறை வளர்ச்சியை குறிக்கும் 'எச்.எஸ்.பி.சி., இந்தியா' பி.எம்.ஐ., குறியீடு, கடந்த ஜன., மாதத்தில் 58.50 புள்ளிகளாக இருந்தது. இது பிப்ரவரியில் 58.10 புள்ளிகளாக சற்றே குறைந்துள்ளது. இந்த குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால் வளர்ச்சியையும், குறைவாக இருந்தால் சரிவையும் குறிக்கும்.
சந்தையில் நிலவும் கடும் போட்டி காரணமாக புதிய ஆர்டர்களின் வளர்ச்சி கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இருப்பினும், கனடா, ஜெர்மனி, சீனா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து சர்வதேச ஆர்டர்கள் கணிசமாக அதிகரித்துள்ளன.
இந்த தேவையை பூர்த்தி செய்ய, நிறுவனங்கள் புதிய பணியாளர்களை பணியமர்த்துவதை அதிகரித்துள்ளன. உணவு மற்றும் தொழிலாளர் செலவுகள் அதிகரித்ததால், கடந்த இரண்டரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிறுவனங்களின் செலவு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சேவை கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
