ADDED : ஜன 16, 2025 12:09 AM

திருப்பூர் : நடப்பாண்டில் ஒரு லட்சம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை துவக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இத்தொழில்துறையினர் தெரிவித்துஉள்ளனர்.
நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்காக, புதிய சேவை, உற்பத்தி அல்லது கண்டுபிடிப்பு சார்ந்த தொழில்களை துவக்கும் வகையில், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. கடந்த 2016ல், 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டத்தை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
நாட்டில், பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் வாயிலாக, 45 சதவீதம் எனும் அளவுக்கு பெண் தொழில்முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர்.
தொழில்கள் எண்ணிக்கையில், அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது; தொழில் தன்மை அடிப்படையில், அமெரிக்கா, சீனா, இஸ்ரேலுக்கு அடுத்ததாக நான்காவது இடத்தில் உள்ளது.
ஸ்டார்ட் அப் தொழில்களின் அடுத்தகட்ட நகர்வுக்காக, ஆண்டுதோறும் தேசிய ஸ்டார்ட் அப் தினம் கொண்டாடப்படுகிறது.
கடந்த, 2022ம் ஆண்டு முதல், ஜன., 16ம் தேதி தேசிய ஸ்டார்ப் அப் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பல்வேறு நாட்டு ஸ்டார்ட் அப் முன்னோடிகள் பங்கேற்கும் நிகழ்ச்சி இன்று, டில்லியில் நடக்கிறது.
இதுகுறித்து ஸ்டார்ட் அப் இந்தியா வழிகாட்டி ஆலோசகர் ஜெய்பிரகாஷ் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும், நம் நாட்டில், 30,000 முதல், 40,000 ஸ்டார்ட் அப்கள் உருவாகின்றன. இதுவரை, 1.57 லட்சம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவக்கப்பட்டுள்ளன.
இந்தாண்டில் மட்டும் மேலும் ஒரு லட்சம் நிறுவனங்களை துவக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தேவையான நிதி ஆதார திட்டமும் உள்ளது. ஸ்டார்ட் அப் இந்தியாவின் ஓர் அங்கமாகிய, 'ஸ்டார்ட் அப் தமிழ்நாடு' திட்டத்திலும் புதிய தொழில்கள் துவங்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

