ஜன., 2ல் சென்னை ஐ.ஐ.டி.,யில் சாஸ்த்ரா- தொழில்நுட்ப திருவிழா
ஜன., 2ல் சென்னை ஐ.ஐ.டி.,யில் சாஸ்த்ரா- தொழில்நுட்ப திருவிழா
ADDED : டிச 27, 2025 01:09 AM

சென்னை,சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில், 'சாஸ்த்ரா' தொழில்நுட்ப திருவிழா, வரும் ஜன., 2ம் தேதி துவங்கும் என, அக்கல்வி நிறுவனத்தின் இயக்குநர் காமகோடி தெரிவித்தார்.
மாணவர்களின் புதிய புத்தாக்க முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில், முழுதும் மாணவர்கள் நிர்வகிக்கும் 'சாஸ்த்ரா' தொழில்நுட்ப திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் நடத்தப்படுகிறது.
அந்த வகையில், 27ம் ஆண்டு சாஸ்த்ரா தொழில்நுட்ப திருவிழா, வரும் ஜனவரி 2ம் தேதி துவங்கி, 6ம் தேதி வரை நடக்க உள்ளது. இதை, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் துவங்கி வைக்கிறார்.
இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி, சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
சென்னை ஐ.ஐ.டி., மாணவர்கள் நடத்தும் சாஸ்த்ரா - 2026 தொழில்நுட்ப திருவிழாவில், அனைவருக்கும் ஐ.ஐ.டி., மெட்ராஸ் என்ற திட்டத்தின் கீழ், 80,000க்கும் அதிகமான பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்று, மாணவர்களின் கண்டுபிடிப்புகளை பார்வையிடுகின்றனர்.
மேலும், பழங்குடியினர் பகுதியில் பணியாற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன. மேலும், 'வெற்றி படிக்கட்டு' எனும் தலைப்பில், தமிழில் வினாடி - வினா போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
ஜன., 6ம் தேதி வரை நடக்கும் தொழில்நுட்ப திருவிழாவில், தினமும் 20,000 முதல் 35,000 பேர் வரை வருகை தருவர் என எதிர்பார்க்கிறோம்.
'சாஸ்த்ரா 2026' நிகழ்வின் ஒரு பகுதியாக, செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு, தொழில்நுட்பம் வாயிலாக, சிகிச்சை அளிப்பது குறித்து, சென்னை பெசன்ட் நகரில் நாளை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

